வவுனியா வைத்தியசாலையின் விடுதி இல.01 இல் போதிய இட வசதிகள் இன்மையால் நோயாளர்கள் விடுதிக்கு வெளியே நடைபாதையில் படுத்துறங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றானது (01) காயங்கள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்படும் நோயாளர்களிற்கு சிகிச்சை வழங்கும் பகுதியாக செயற்பட்டு வருகின்றது.
குறித்த விடுதிக்குள் அண்ணளவாக 40 கட்டில்களே போடப்பட்டுள்ளன. அதனைவிட அதிகமான கட்டில்களை போடுவதற்கு அவ்விடுதியில் இடவசதி இல்லாதநிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் அதிகமான நோயாளர்கள் வருகை தரும்போது அவர்களிற்கு ஒதுக்குவதற்கு கட்டில்கள் இன்மையால், விடுதிக்கு வெளியே பிரதான கட்டடத்தின் வாயில் பகுதியில் நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், குறித்த பகுதியால் பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நடந்துசெல்லும் போது அவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறித்த விடுதியில் கட்டில்கள் பற்றாக்குறையால் நோயாளர்களிற்கு படுக்கைகளை ஒதுக்கி கொடுப்பதில் தாதிய உத்தியோகத்தர்களும் அசௌகரியங்களை எதிர்கொள்ளுகின்றனர்.
அதேவேளை, விடுதியில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதால் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்படும் போது கடமை புரியும் ஊழியர்கள் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
வடக்கின் முக்கிய வைத்தியசாலையாக காணப்படும் வவுனியா வைத்தியசாலைக்கு முல்லைத்தீவு,மன்னார் உட்பட பலபகுதிகளை சேர்ந்த நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தீவிரமான நோயாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படும் குறித்த விடுதியில் போதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது நோயாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.