பாகம்-2—————————————————————வை எல் எஸ் ஹமீட்
நாம் முன்னைய பாகத்தில் குறிப்பிட்டதுபோல் 1978ம் ஆண்டு யாப்பில் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரத்தைவிட அதிகமாக இருந்தது. அதிகார வேறாக்கத்தின் இடைவெளி ( separation of power) மிகவும் குறைவாக இருந்ததால், சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கி ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் சென்றது.
இதன் காரணமாக ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்பட வேண்டும்; என்ற கோசம் வலுத்தது. ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதாக தேர்தல் வாக்குறுதி தொடர்ச்சியாக கொடுக்கப்பட்போதும் யாரும் அதனை ஒழிக்கவில்லை. அதேநேரம் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் தேவையாக இருந்தது.
இந்நிலையில் ஆகக்குறைந்தது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும்; என்ற கோசம் குறிப்பாக கற்றவர்களுக்கு மத்தியில் இருந்து ஒலிக்கத் தொடங்கியது. இந்தப் பின்னணியில் 2001ம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஐ தே க அரசு ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் 17வது திருத்தத்தை 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ம் திகதி கொண்டுவந்தது.அதில் மிகமுக்கியமான அம்சம்தான் அரசியலமைப்புப் பேரவையாகும். ( Constitutional Council)
அதன்பின் 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தின்மூலம் அரசியலமைப்புப் பேரவை இல்லாமலாக்கப்பட்டு பாராளுமன்றப் பேரவை ( Parliamentary Council) கொண்டுவரப்பட்டது. அது 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி கொண்டுவரப்பட்ட 19வது திருத்தத்தின்மூலம் இல்லாமலாக்கப்பட்டு மீண்டும் அரசியலமைப்புப் பேரவை ( Constitutional Council) கொண்டுவரப்பட்டது. அது தற்போதைய 20 வது திருத்தத்தின்மூலம் இல்லாமலாக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றப் பேரவை கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
இங்கு 19வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப் பேரவையும் 20வது திருத்தத்தில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள பாராளுமன்றப் பேரவையும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. அதேநேரம் முன்னர் கொண்டுவரப்பட்ட குறித்த இரு கட்டமைப்புகளுக்கும் இங்கு ஆராயப்படுகின்ற இரு கட்டமைப்புகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் சுட்டிக்காட்டப்படும்.
இவற்றிற்குள் செல்லமுன் குறித்த இரு கட்டமைப்புகளும் 1978ம் ஆண்டைய original யாப்பில் எவ்வாறிருந்தது; என்பதை சற்று மேலோட்டமாகப் பார்த்தால் பிந்திய மாற்றங்களைப் புரிந்துகொள்வது இலகுவாக இருக்கும்.
சரத்து 54: இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது. இச்சரத்தின் பிரகாரம் சட்டமா அதிபரையும் பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதியே நேரடியாக நியமிப்பார்; என்பதாகும். இந்த அதிகாரத்தின் காரணமாக பலவித விமர்சனங்கள் கடந்தகாலங்களில், குறிப்பாக பொலிஸ் திணைக்களம் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, இவர்களை நியமிக்கின்ற ஏகபோக அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கக்கூடாது; என்ற கருத்து மேலோங்கியிருந்தது.
பொதுச்சேவை- public Service——————————————-இதன் பிரகாரம் அரச உத்தியோகத்தர்களை நியமிக்கின்ற, இடமாற்றம், நீக்கம், ஒழுக்காற்று நடவடிக்கை போன்ற அதிகாரங்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ( சரத்து 55(1)
பொதுச்சேவை ஆணைக்குழு- Public Service Commission—————————————ஐந்து பேருக்கு குறையாத பொதுச்சேவை ஆணைக்குழுவொன்றை அமைக்கின்ற அதிகாரத்தை சரத்து 56(1) ஜனாதிபதிக்கு வழங்கியது. இவர்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள். இவர்களை நீக்குகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 56(4)
அமைச்சரவைக்கு வழங்கப்பட்ட மேலே 55(1) இல் கூறப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்பான அதிகாரங்களை அமைச்சரவை பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கலாம்; ( கட்டாயமில்லை) ஆனாலும் அமைச்சரவை விரும்பினால் அவ்வாறு பொதுச்சேவை ஆணைக்குவிற்கு வழங்கிய 55(1) இல் கூறப்பட்ட ( இடமாற்றம்போன்ற……) அதிகாரங்களில் சிலவற்றை எத்தவொரு அமைச்சருக்கும் வழங்கலாம். அதன்பின் அந்த ஆணைக்குழு அந்த அதிகாரங்களைச் செயற்படுத்தக்கூடாது. 55(3)
அதேநேரம் 55(1) இல் கூறப்பட்ட அதிகாரங்களில் திணைக்களத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் அமைச்சரவையிடமே இருக்கும். அதனை யாருக்கும் வழங்கமுடியாது. 55(2)
Committees of Public Service Commissionபொதுச்சேவை ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் ( ஆணைக்) குழுக்கள்- சரத்து 57—————————————————————இதன் பிரகாரம் அமைச்சரவையின் அறிவுறுத்தலின்பேரில் அமைச்சரவை விதந்துரைக்கின்ற விடயதானங்கள் தொடர்பாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் அவ்வாணைக்குழுவில் இருந்து மூவரை அந்த ஒவ்வொரு குழுவிற்கும் நியமிக்கலாம். ( உதாரணம் கல்விச்சேவைகள் ( ஆணைக்) குழு.
அதேநேரம், பொதுச்சேவை ஆணைக்குழுவின் அல்லது 55(1) வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், அல்லது அவ்வாறு அமைச்சருக்கு/அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரத்தின்கீழ் நியமனம், இடமாற்றம், ஒருக்காற்று தடவடிக்கை போன்றவை தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் ரத்துச்செய்கின்ற, மாற்றுகின்ற அதிகாரம் அமைச்சரவைக்கு இருந்தது. சரத்து 59
குறிப்பு- இங்கு கவனிக்க வேண்டியது இந்த பொதுச்சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவர்களை நிமிக்கின்ற, நீக்குகின்ற அதிகாரம் ஜனாதிபதியிடமும் அவற்றிற்கு சில அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கின்ற, அவற்றில் சிலவற்றை மீளப்பெற்று எந்தவொரு அமைச்சருக்கும் வழங்குகின்ற அதிகாரம் அமைச்சரவையிடமே இருந்தது. அவர்களின் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்கின்ற அதிகாரமும் இருந்தது.
இந்த ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் நேரடியாக எந்த அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய பதவி நிலையும் அதிகாரமும் ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவையிடமும்தான் இருந்தது.
எனவே, இந்த ஏகபோக அதிகாரத்தில்சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகத்தான் அரசியலமைப்புப் பேரவை மற்றும் சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அரசியலமைப்பு பேரவை; ( Constitutional Council)- சரத்து 41A———————————————————17ம் மற்றும் 19ம் திருத்தங்களில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப் பேரவை கிட்டத்தட்ட ஒரேவிதமானவை; எனத் தெரிவித்திருந்தோம்.
Composition- அங்கத்துவம்—————————————17வது திருத்தத்தில்
- பிரதமர்
- சபாநாயகர்
- எதிர்க்கட்சித்தலைவர்
- ஜனாதிபதியின் பிரதிநிதி
- பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்தவம் செய்கின்ற கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசித்து கூட்டாக நியமனம் செய்கின்ற ஐவர்
இவர்களுள் மூவர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து சிறுபான்மைகளின் நலன்களைப் பேணுவதற்காக நியமிப்படுகின்ற சிறுபான்மைப் பிரதிநிதிகள்.
- ஒருவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரின் உடன்பாட்டுடன் நியமிக்கப்பட வேண்டும்.
இதில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தவிர்ந்த ஏனைய ஏழு பேரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளே!
இவர்களின் பெயர்கள் எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு அனுப்பட்டதும் உடனடியாக ஜனாதிபதி அவர்களை நியமிக்க வேண்டும்.
19வது திருத்தத்தில்—————————
- பிரதமர்
- சபாநாயகர்
- எதிர்க்கட்சித் தலைவர்
- ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ( குறிப்பு- 17இல் ஜனாதிபதி நியமிப்பவர் ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி, 19இல் அவரும் ஒரு பா உ)
- பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டாக நியமிக்கின்ற ஐவர். இவர்களுள் இருவர் கட்டாயம் பாராளுமன்ற உறுப்பினர்கள்)
- ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சிகளின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் சம்மதத்துடன் நியமிக்கப்படுபவர்
நியமனம்- இந்த அங்கத்தவர்கள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்ககப்பட்டு 14 நாட்களுக்குள் அவர் நியமனம் செய்யாவிட்டால் அவர்கள் சுயமாகவே அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.
இவர்களின் பதவிக்காலம் மூன்று வருடங்கள்.
குறிப்பு- 17இல் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய ஏழுபேரும் சிவில் சமூகப்பிரதிகளாக இருக்க, 19இல் ஏழுபேர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மூவர் மாத்திரமே சிவில் சமூகப் பிரதிநிதிகள்.
இங்கு சிறுபான்மைகள் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் இருக்கின்றன. ஒன்று: மேலே 5 இல் கூறப்பட்ட ஐவரையும் நியமிக்கும்போது பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற சகல அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்களைக் கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுகின்றவர்கள் தொழில் ரீதியான, சமூக ரீதியான பிரிவுகளை கொண்ட பன்முகத் தன்மையை ( pluralistic)வெளிப்படுத்துபவர்களாக அமையவேண்டும்.
இந்த விடயத்தில் 17, 19 ஒப்பீடு—————————————-17இல் மூவர் கட்டாயம் மூன்று சிறுபான்மைகளையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 19இல் பன்முகத்தன்மை ( pluralistic) என்ற சொல்லும் தொழில் மற்றும் சமூகப்பிரவுகள் என்ற விரிவான சொற்பதம் பாவிக்கப்பட்டதாலும் 17இல் கூறப்பட்டதுபோல் சிறுபான்மைகளின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படாததாலும் மூன்று சிறுபான்மைகளும் உள்வாங்கப்படுவது அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ( அவ்வாறு நியமிக்கப்பட்டபோதும்கூட)
அதனைவிடவும் முக்கியம் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர்கூட சிறுபான்மைப் பிரதிநிதியாக இருக்கவேண்டும்; என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
நல்லாட்சியில் இப்பேரவையில் இரு தமிழர்கள் இருந்தார்கள். காரணம் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தமிழர், 5 இல் கூறப்பட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் பங்கிட்டுக்கொண்டதால் மேலதிகமாக ஒரு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்கக் கிடைத்தது. ஆனால் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கூட நியமிக்கப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் சிலவேளை ஒரு தமிழரும் இல்லாமல் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுமே பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்.
எனவே, இது அந்த வரைபு மேற்கொள்ளப்பட்டபோது நம்மவர்கள் நடந்துகொண்ட கவனக்குறைவும் பொறுப்பற்ற தன்மையும் என்பதை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
முக்கியமான அரசியல் அமைப்புத் திருத்தங்கள் வருகின்றபோது அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஆழமாக ஆராயப்படவேண்டும்; என்பதை இத்தவறு உணர்த்துகின்றது.
இனியாவது சிறுபான்மைக் கட்சிகள் அரசியலமைப்புத் திருத்தத்தின்போது அதீத கவனம் செலுத்தவேண்டும்.
( தொடரும்)