முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது
இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்த்தரப்பினரும், ஆளும் பொதுஜன பெரமுனவின் சில பங்காளிக் கட்சிகளும் முரண்பட்டுள்ளனர்.
பௌத்த தேசியவாதிகளுக்கும், மகாநாயக்கர்களுக்கும், இருபதில் உள்ளடங்கப்பட்டுள்ள சில சரத்துக்களில் உடன்பாடு இல்லை. இந்த சட்டமூலமானது நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அனைத்து தரப்பினர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபோல் தமிழ் கட்சிகளும், அமைப்புக்களும் இது தொடர்பான தங்களது நிலைப்பாடுகளையும், எதிர்கால ஆபத்தினையும் தெளிவாக கூறிவருகின்றார்கள்.
ஆனால் இந்த சட்டவரைபு தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் மட்டும் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன் ?
மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா ? அதாவது இருபதாவது திருத்தம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்று கூறப்போகிண்றார்களா ?
அல்லது கருத்துக்கூருவதில் ஏதாவது தர்மசங்கடமான நிலை உள்ளதா ?
அரசாங்கத்தை விமர்சித்தால் மீண்டும் அவர்களுடன் இணைந்துகொள்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிண்றார்களா ?
இருபதாவது திருத்த வரைபு தொடர்பில் தலைவர்களது கருத்துக்களை அறிவதற்கு முஸ்லிம் மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
அது முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா ? கூடுமா ? கூடாதா ? எதுவாக இருந்தாலும் தங்களது கருத்துக்களையும், கொள்கைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமது தலைவர்களுக்கு உள்ளது.
தற்போது எமது தலைவர்கள் மௌனமாக இருப்பதனை உற்றுநோக்கும்போது மதில்மேல் பூனையாக பதுங்கி இருந்துவிட்டு காய்ச்சிய பாலுக்காக பாய்ச்சலுக்கு தயாராக இருப்பதுபோன்று தெரிகிறது.
2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்தனர். தேர்தல் முடிந்தபின்பு மௌனமாக இருந்துவிட்டு, சில மாதங்கள் சென்றதன் பின்பு மகிந்தவுடன் ஒட்டி உறவாடினர். 2010 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்பும் இவ்வாறுதான் நடைபெற்றது. இது கடந்தகால வரலாறாகும்.
அதுபோலவே இந்த தேர்தலிலும் மகிந்த தரப்பினர்களை கடுமையாக விமர்சித்துவிட்டு மௌனமாக இருக்கின்றனர். இது மீண்டும் மஹிந்த தரப்பின் பக்கம் அமைச்சர் பதவிகளுக்காக பாய்ச்சலுக்கு தயாராகி வருவதனையே காட்டுகின்றது.
எதுவாக இருந்தாலும், “பேச்சுவார்த்தையின்போது எங்களது நிபந்தனைகளையும், கோரிக்கைகளையும் ராஜபக்ஸ அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் அரசாங்கத்துடன் இணைந்துளோம்” என்று மட்டும் கூறிவிடாதீர்கள். ஏனெனில் கலப்படம் இல்லாத இந்த பொய்யை கடந்த காலங்களிலும் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டது. அதனால் இதனை நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை.