இலங்கையில் உள்ள சிங்கராஜா வனப்பகுதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவுக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர முறையிட்டுள்ளார்.
1988ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சொத்தாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள சிங்ராஜா வன இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று யுனெஸ்கோ இயக்குநருக்கு சமரவீர அறிவித்துள்ளார்.
முந்தைய சந்தர்ப்பங்களிலும் வனப்பகுதியின் எல்லையில் சாலைகள் அமைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமரவீர தமது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் 2020 ஆகஸ்ட் 10 அன்று, இலங்கை இராணுவத்தின் உதவியுடன் சிங்கராஜா வன எல்லையில் அமைந்துள்ள லங்ககமாவிலிருந்து தெனியாய வரை சாலை ஒன்றை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன்போது வரலாற்று இடங்களில் மற்றும் மண்சரிவு உட்பட்ட இயற்கை அனர்த்தம் குறித்த எவ்வித வழிகாட்டுதல்களும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்று மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் 2020 ஆகஸ்ட் 19 அன்று தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுளளதாக மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திட்டம் லங்காகம கிராம மக்களின் போக்குவரத்து வசதி கருதி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டபோதும் அது தனிப்பட்டவர்களின் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆரம்பிக்கப்பட்டதாக மங்கள குற்றம் சுமத்தியுள்ளார்.