வவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள் இயங்கி வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த 2000 ஆண்டிலிருந்து சொந்தக்காணிகள் அற்ற நிலையில் பேருந்து சங்கம் , முச்சக்கரவண்டிகள் சங்கம் , வர்த்தக சங்கம் என்பன வாடகை கட்டடங்களில் செயற்பட்டு வருகின்றன.
நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை உள்ளடக்கிய குறித்த சங்கங்களுக்கு கைவிடப்பட்ட அரச காணி ஒதுக்கித் தருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அரசியல் பிரதிநிதிகளால் வாக்குறுதிகள் பல தடவைகள் வழங்கப்பட்டும் இன்று வரையிலும் காணி வழங்கப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
கடந்த பத்து வருடங்களாக மாறி மாறி வரும் பிரதேச செயலாளர்களினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏமாற்றப்பட்டு வருவதாக குறித்த சங்கங்களின் உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பேருந்து சங்கத்தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு தடவையும் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், மாவட்ட அரசாங்க அதிபரிடமும், பிரதேச செயலாளரிடமும் எமது கோரிக்கைகளையும், மகஜர்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்.
அத்துடன் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் தவறாது கலந்துகொண்டு கைவிடப்பட்ட அரச காணி ஒன்றை எமக்கு அடையாளப்படுத்தும் போது எமது சங்கத்தின் நிதியிலிருந்து எமக்கான சொந்தக் கட்டடங்களை அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
கடந்த பத்து வருடங்களாக காணி தருகின்றோம். இடங்களை அடையாளப்படுத்துமாறு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எங்களைக் கோருகின்றனரே தவிர அவர்களால் எமக்கு காணியை அடையாளப்படுத்தி பெற்றுத்தர முடியவில்லை.
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக இயங்கும் குறித்த முக்கிய மூன்று சங்கங்களின் செயற்பாடுகள் நகரில் மிகவும் அளப்பெரியது. அரச,தனியார், இயற்கை இடர்கள் , இடம்பெயர்வுகள் , கல்விச் செயற்பாடுகள், சமூகச் செயற்பாடுகள் போன்ற உதவிகளை தமது சங்கத்தினூடாகவும், சங்கத்தின் அங்கத்தவர்களுக்கும் பல்வேறு செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான சங்கத்திற்கான சொந்தக்காணி நகரின் மையப்பகுதியில் ஒதுக்கி வழங்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளையும், அரச அதிகாரிகளையும் சார்ந்த செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறான சங்கங்களுக்கு காணி ஒதுக்கி வழங்கும் பட்சத்தில் நகரில் அபிவிருத்தி மேலும் அதிகரிப்பதுடன்,பல்வேறு உதவித்திட்டங்களும் இச்சங்கத்தின் ஊடாக நகரிற்கு வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.