Breaking
Sun. Nov 24th, 2024


சுஐப் எம். காசிம் –

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் காணப்படும் பல புதிய முகங்கள் வீதாசாரத் தேர்தலின் விந்தைகளைப் புலப்படுத்துகின்றன. மிகப் பெரிய பழந்தலைமைகளை வீழ்த்தி, சிறிய தலைமைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளதை அவதானித்தால், தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றி முழு அளவில் திறமையில் தங்கியிருக்கவும் இல்லை. இதையும் இத்தேர்தல் எமக்குச் சொல்கிறது. நாட்டின் முதலாவது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை இம்முறை பாராளுமன்றத்திற்கு வராமலாக்கிய தேர்தல் முறையல்லவா இது! இத்தனைக்கும் இக்கட்சிதான் இத்தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. முன்னாள் எம்.பிக்கள் 81 பேரைத் தோற்கடித்ததும் இத்தேர்தல் முறைதான். இப்போது புதிதாக 81 பேருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தாலும் தொடர்ந்தும் இது வாய்க்கப் பெறுவது இவர்களின் திறைமைகளால் மாத்திரமல்ல. அதிர்ஷ்டமும் பலரின் வெற்றிக்குப் பங்களிக்கிறது.

இவ்வாறு இவ்வீதாசாரத் தேர்தல் முறையால் வந்த பலரின் வருகைகளில் வடக்குப் பிரதிநிதிகள் சிலரின் வருகையும் அவர்களது கன்னி உரைகளும் தென்னிலங்கையின் கண்களுக்குள் தீப்பொறியைத் தீர்த்தியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதில் கடும்போக்கர்களுக்கு இருந்த மகிழ்ச்சியைத் தவிடுபொடியாக்கியதும் இந்தக் கன்னி உரைகளில் சிலவைதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பது புலிகளின் சிந்தனைகளை அல்லது புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்களின் செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கு நிகரென நினைத்த தென்னிலங்கைப் பெருந்தேசியம், இந்த உடைவில் எழும்பும் புதிய கோபுரங்கள் ஈழ தேசத்துக்கான அத்திவாரமென அச்சப்படுகிறது. இதனால் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் உரையை பாராளுமன்றப் பதிவுப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் கோரப்படுகிறது. அவ்வாறு என்னதான் பேசினார் விக்னேஸ்வரன்? “உலகில் உயிர் வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்”. வேறு எவர் பேசியிருந்தாலும் இது பிரச்சினையாகி இருக்காது.

வடக்கின் முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் செய்தமை, செய்யத் தொடங்கியமை எல்லாம் புலிகளின் ஆயுதம் சாதிக்கத் தவறியவைகள்தான். இந்தக் கணிப்பீடு உள்ள நிலையில், நந்திக்கடலில் நடந்தவற்றையும் இவர் தீர்மானமாக்கியுள்ளாரே. மேலும், முள்ளிவாய்க்காலுக்குச் சென்றுதான் இவர் எம்.பியாகச் சத்தியமும் செய்துள்ளார். இதனால்தான் இது சர்ச்சையாகியுள்ளது. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, “தமிழர்களின் தாகத்தை தீர்க்காது” என்ற முழக்கத்தில் வந்ததாகவே விக்னேஸ்வரனின் கட்சி பார்க்கப்படுகிறது. இவருக்குப் பின்னாலிருந்து இயக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர், டயஸ்போராக்களின் வளர்ப்புப் பிள்ளைகள் என்ற பார்வையிலும் பதற்றத்திலும் தெற்கு பயணிக்கையில், இப்படியா கன்னி உரையாற்றுவது?உணர்ச்சிவசப்பட்டதால் தமிழர்கள் வாங்கிய அடி, சந்தித்த பின்னடைவுகள் போதாதா? “பெருந்தேசியத்தின் எழுச்சிக்கு சோறுபோடும் அரசியல், சமயோசிதமாகாது”. இவ்வாறு செல்கிறது சிலரின் விமர்சனம்.

இவற்றை நோக்குகையில், கடந்த பாராளுமன்றத் தேர்லில் 16 ஆசனங்களை வென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் 10 ஆகக் குறைந்ததை, உரிமை அரசியலில் ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்க முடியாத நிலையே ஏற்படுகிறது. துள்ளிக் குதிக்காத தூரநோக்குள்ள அரசியல் பார்வைகள்தான் இனிப்பலமாகவுள்ள களத்தையே சிறுபான்மை சமூகத்தினர் எதிர் நோக்கியுள்ளனர். இதை அனுபவங்களால் கற்றறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, புதிய வருகையாளர்களின் துள்ளல்கள் தோல்வியை ஏற்படுத்தக் கூடாதென்ற கவலை இல்லாமலிருக்காது. கன்னியுரையிலே கண்டனத்துக்குள்ளான புதிய பிரதிநிதிக்கு மிதவாத அரசியலிலுள்ள பொறுமை, தியாகங்கள் இப்போது புரிந்திருக்கும். “ஆழச் சுழியோடுபவனை, நீந்தத் தெரியாதவன் என்று சொல்லி விமர்சித்து விட்டோமே” என்று விக்கி நிச்சயமாக வியக்கத்தான் செய்வார்.

மேலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திர குமார் மற்றும் அவரது சகா கஜன் ஆகியோரையும் ஈழத்தில் முளைக்கும் உரிமைக்குரலாகப் பார்க்கும் நிலைமைக்கு அவரது நிலைப்பாடுகள் சென்றுள்ளன. “ஒரு நாடு, இரு தேசம்” என்ற புதிய அரசியல் பாதையில் பாராளுமன்றம் வந்துள்ள இவர்களின் கட்சிதான், தமிழர்களின் தனித்துவ அடையாளத்திற்காக, முதலாவதாக 1946 ஆம் ஆண்டு ஆரம்பமான கட்சி. சர்வதேசத் தலையீடுகள், மிகப் பலமான ஆயுதப் போர் மற்றும் ஐம்பது வருட ஜனநாயக வழிமுறைகள் எல்லாம் கிடப்பில் இருக்கையில், அடையத் தேவையானதை எவ்வாறு அடைவது? சிறுபான்மை சமூகம் சிந்திக்க வேண்டியவை இவைகள்தான்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்பதை அரசாங்கம் திணிக்கப் பார்க்கிறதா? அல்லது அழுத்த நினைக்கிறதா? இவ்விரு முயற்சிகளும் ஏதோ ஒரு வகையில், சிறுபான்மையினரைக் கவலைப்படுத்தவே செய்கிறது. எனவே, இக்கவலைகளை இரட்டிப்பாக்காது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து பாராளுமன்றம் வந்துள்ள பிரதிநிதிகளின் செயற்பாடுகள் காலக்கழிகைகளுக்கு ஏற்றவாறு இருப்பது அவசியம். நாட்டில் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த நிலைமைகள் இல்லை. போராட்ட சக்திகளின் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டும் சிங்களப் பெருந்தேசியத்தின் எழுச்சிக்குள் மூச்சுத் திணறவும் நேரிட்டுள்ள இன்றைய நிலையில், சமயோசித நகர்வுகளையே நம்ப வேண்டியுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டுதான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்தியாவின் அக்கறையில்தான் தமிழர்களின் அரசியல் நலன்கள் தீர்மானிக்கப்படவுள்ளதாகக் கூறுகிறார். இவரின் கருத்துக்கள், அந்நிய சக்திகளைத் தலையிடச் செய்வதற்கான அழைப்புத்தான். உள்ளதையாவது காப்பாற்றும் அரசியல் நகர்வுகளாகத்தான் இவ்வழைப்பு உள்ளதே தவிர, புதிதாக எதைப் பெறவும் இந்தியா அழைக்கப்படவில்லை. இதை சிங்களப் பெருந்தேசியம் உணர்தல் அவசியம். இவ்வாறு உணரத் தலைப்படுகையில், புதிய மாற்றுத் தலைமைகளின் போக்கு தென்னிலங்கையைச் சந்தேகப்படுத்துவதாக இருத்தலாகாது. ‘கத்தியின் கூர்மையில் நடந்து அடைய வேண்டியிருக்கையில், துள்ளிக் குதிக்கும் அரசியல், பொதி சுமக்கவே செய்யும்’.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுகள் எது பற்றியும் பேசப்படவில்லை. யுத்த வெற்றியின் பின்னர், இனப்பிரச்சினை இல்லையென்ற பார்வையை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் இராஜதந்திரம் பொதிந்துள்ள உரைக்குள்தான், தமிழர் தரப்பும் இராஜதந்திரங்களைக் கையாள வேண்டியேற்பட்டுள்ளது. ஆனால், தமிழ் கடுந்தேசியத்தாலோ அல்லது மாகாண சபைகளின் (வடக்கு, கிழக்கு) கடந்த கால ஆளுகை அனுபவங்களாலோ இவ்வாறான இராஜதந்திரங்களை வெல்ல முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இது தெரியும். இதனால்தான், தேர்தல் வெற்றிக்குப் பங்களிக்காவிட்டாலும் அதே ஜனாதிபதி, அதே அரசாங்கத்துடன் எவ்வாறு நடந்து கொள்வது, இராஜதந்திரிகளை அணுகுவது மற்றும் இராஜதந்திரங்களைக் கையாள்வதென நிதானமாகச் சிந்திக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இதனால்தான், மாற்றுத் தலைமைகளையும் இணைந்து பணியாற்ற வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைத்துமுள்ளது. இவ்வாறான நிதானங்களே, தமிழர்களின் அரசியல் பலமாகப் பார்க்கப்படுகிறதே தவிர, வெறும் எண்ணிக்கையாலோ அல்லது பிரிந்து சென்று பாராளுமன்றம் வந்துள்ளோரின் துள்ளல்களிலோ அல்ல.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *