Breaking
Sun. Nov 24th, 2024

ஊடகப்பிரிவு

ஹம்பாந்தோட்டை மக்களை ஏமாற்றியது போல், குருநாகல் மாவட்ட மக்களையும் வாக்குகளுக்காக இப்போது ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“ஹம்பாந்தோட்டையில் கப்பல் வராத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையம், கிரிக்கெட் விளையாட முடியாத சூரியவெவ கிரிக்கெட் மைதானம், கூட்டங்கள் நடத்த முடியாத மாநாட்டு மண்டபங்கள் ஆகியவற்றை அமைத்து, அவர்களை முட்டாளாக்கியது போன்று, இப்போது குருநாகல் மாவட்ட மக்களையும் பொய்களைக் கூறி, ஏமாற்றத் தொடங்கியுள்ளனர்.

மஹிந்த அரசினால் அமைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நல்லாட்சி அரசு விற்றுவிட்டதாகவும், விற்ற பணம் எங்கே இருக்கின்றதென்று கூட தெரியாதென்றும், பிரதமர் தேர்தல் மேடைகளில் கூறிவருகின்றார். நிதி அமைச்சராக இருக்கும் பிரதமர், பொறுப்பில்லாமல் இவ்வாறு கூற முடியுமா? அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது? அல்லது நல்லாட்சி அரசின் முக்கிய பிரமுகர்களிடமா இந்தப் பணம் இருக்கின்றது? என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், வெறுமனே வாக்குக் கேட்பதற்காக இவ்வாறான கதைகளை கதைக்கக் கூடாது.

இலங்கையின் வளங்களையும் சொத்துக்களையும் சூறையாடியவர்கள் யார்? அல்லது இலங்கைச் சொத்துக்களை விற்பனை செய்த சூரர்கள் யாரென்று மக்களுக்கு நன்கு தெரியும். இலங்கையில் மருந்தகத் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக, வெளிநாட்டு  நிறுவனமொன்று தன்னையும், சமல் ராஜபக்ஷவையும், நாமல் ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியதாகவும், 450 ஏக்கர் மட்டில் அதனை அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும் கூறியுள்ள பிரதமர், “அனுமதி வழங்க முடியும், இடையில் சூழலியல் அறிக்கை வந்த பின்னர் நிறுத்த முடியுமென” கூறுகின்றார். போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் தவிர்ப்பதற்கான முற்கூட்டிய அறிவிப்பே இது.

இவர்கள் ஏமாற்றுவதிலே அசகாயசூரர்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்கு 1.3 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்டு, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பத்தாயிரம் கப்பல் வரையில் துறைமுகத்துக்கு வருமெனவும் கூறப்பட்டது. 99 வருடக் குத்தகையிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. எனினும், துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது மாதத்தில், 37 கப்பல்கள் மாத்திரமே ஹம்பாந்தோட்டைக்கு வந்தது. இதுதான் அப்போதைய அரசின் செயற்பாடு. ஆனால், நல்லாட்சி வந்த பிறகு, சீன துறைமுக கம்பனியொன்றுடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 70 வருட குத்தகையுடன் 1.4 பில்லியன் பெறப்பட்டு, பழைய கடன்கள் அடைக்கப்பட்டன. சீன துறைமுக கம்பனிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 15% சதவீத நிலையான பங்குகளும் இருந்தன. எனவே, நல்லாட்சி அரசு எதையுமே விற்கவில்லை. இந்தத் துறைமுகம் கூட 70 வருடத்துக்குப் பிறகு, நமது நாட்டுக்குச் சொந்தமாகும்.

மஹிந்த அரசுதான் காலிமுகத்திடல் காணியை ஷங்ரில்லா ஹோட்டலுக்கு விற்றார்கள். காலி முகத்தின் உப்புநீரை சீனாவுக்கு விற்று, துறைமுக நகரத்தை உருவாக்கினார்கள். இப்போது, ஷங்ரில்லாவுக்கு பின்புறம் உள்ள காணியை துப்பரவாக்கி, வெளிநாட்டுக் கம்பனி ஒன்றுக்கு தாரைவார்த்துள்ளார்கள். இலங்கையின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியவர்கள், நல்லாட்சி அரசு பற்றி விமர்சிக்க எந்தவிதமான தகுதியும் இல்லாதவர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *