அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஒருவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஊழியர் இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியாளர் ஒருவருக்கான கடமைகளை அவர் விரும்பிய பிரிவிற்கு மாற்றி வழங்குவதற்காக சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தரால் 15,000 ரூபாய் லஞ்சம் கோரப்பட்டுள்ளது.
லஞ்சப் பணத்தில் 10,000 ரூபாயை இன்று பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.