Breaking
Sun. Nov 24th, 2024

அஷ்ரப் நிசார்-

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்” மற்றுமொரு சாதனையாக, இம்முறைத் தேர்தல் வியூகங்கள் அமையவுள்ளன. பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கவும் பேரம்பேசலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும், தலைவர் ரிஷாட் பதியுதீன் வகுத்துள்ள திட்டங்கள், மாவட்டங்கள் தோறும் வேறுபடுகின்றன. சாத்தியமான இடங்களில் தனித்தும், சகோதர சமூகங்களின் அபிலாஷைகளை வெல்ல வேண்டிய மாவட்டங்களில் இணைந்தும் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்வரும் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில்  பெரும் சக்தியாகத் திகழும்.

வடபுலத்தவரின் தேவைக்கு குரல்கொடுக்க உதயமானாலும் காலவோட்டத்தில், இத்தலைமையின் தேவை நாட்டின் நாலா திசைகளிலும் உணரப்பட்டது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்வின் அடிப்படைப் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்கொண்டதால் எதிர்நீச்சலுக்கும் பழக்கப்பட்டு, எதையும் சாதிக்கும் திறன், திராணியையும் வளர்த்துக்கொண்டார். போராட்டச் சூழலின் பின்புலங்கள், இச்சூழல் ஏற்படுத்திய வடுக்கள், இதனால் ஏற்பட நேர்ந்த பின்விளைவுகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் தீட்சண்யங்களுக்கு துணைபுரிகின்றன. கடந்தகாலச் சாதனைகள் இதனையே பறைசாற்றுகின்றன. இந்தச் சாதனைகளைத் தொடர்வதற்கே இம்முறையும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

அகதிச் சமூகத்திற்கு அரசியல் தலைமை வழங்கும் ரிஷாட்டின் ஆளுமைகள் எல்லை விரிந்து, போரால் பாதிப்புற்று ஏதிலிகளான தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டதுதான் உண்மை. முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ்ச் சகோதரர்களை வௌியேற்றி, விடுவித்த இவர், பாரபட்சமின்றிய சேவைகளுக்கென்றே தன்னை அர்ப்பணித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக வௌியேற்றப்பட்ட ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்குவதும் அவர்களுக்கு உணவு, இருப்பிடம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, தொழில்வாய்ப்புக்களை வழங்குவதும் சாதாரண சவாலில்லை.

இவரது சேவைகள் இன்று எதிரிகளின் கண்களைக் குடைவதாக இருந்தால், ரிஷாட்டின் ஆளுமைக்கு எதிராக பொறாமைக்காரர்கள் புறப்பட்டுவிட்டார்களென்றே பொருள்படுகிறது. இவ்வாறான சுயநலமிகளுக்கு பேரினவாதம் ஒத்தடமும் உதவியும் புரிவது, மாற்று முஸ்லிம்களுக்கான தலைமைகளை உருவாக்குவதற்கல்ல. மாற்றுத் தலைமைகள் என்ற போர்வையில், ஏற்கனவே உள்ள ஆளுமைத் தலைமைகளை அழிப்பதற்கே. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று, தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றுவதற்கு தடையாகவுள்ள தலைமைகள்தான், இன்று பேரினவாதம் எதிர்கொள்ளும் நவீன சவால்கள்.

எனவே, இரட்டைச் சவால்கள் மோதும் இத்தேர்தலில், அதிகாரங்களுக்கு அடிமைகளாகுவதை விடுத்து, தன்மானத்துக்கு தோள்கொடுக்க முன்வருவதே, ஜனநாயக அரசியலுக்கு ஆரோக்கியமாக அமையும். தேசப்பற்றுக்காக ஒன்றிணையுமாறு அழைத்துக்கொண்டு, ஒருபுறம் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகளாகக் காட்ட முனையும் பேரினவாதிகளின் அழைப்புக்களுக்குள் ஓரங்கட்டும் சித்தாந்தங்கள் துளிர்க்கின்றன. இந்தத் துளிர்கள் முளைவிடாமல் முளையில் கிள்ளியெறிவதில்தான், சகல சமூகங்களுக்கும் அரசியலில் சமசந்தர்ப்பங்கள் வாய்க்கவுள்ளன.

பிரிவினைவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் எனக்கூறிக் கொண்டு, சகோதர சமூகங்களின் சாதாரண உரிமைகளுக்கும் விலங்கிடத் துடிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இடம்விடக் கூடாதென்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கையைப் புரிந்துகொள்ளும் எவரும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான புரட்சிப் பயணத்திற்கு புறக்காரணங்கள் கூற முடியாது.    

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *