Breaking
Sun. Nov 24th, 2024

ஊடகப்பிரிவு

முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும் குடியேற்ற முடிந்ததென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீன், கடந்த (05) மன்னார், முசலி, அளக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது,

இந்தப் பிரதேசத்தில் எங்கள் கால்கள்படாத இடங்கள் எதுவுமே இல்லையென்பது உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் இப்போது குடியமர்ந்துள்ள இடங்கள் ‘மீள்குடியேற்றத்துக்கு ஒருபோதுமே சாத்தியமாகாது’ என்றும் ‘இந்த முயற்சிகளில் வெற்றிகாண முடியாதென்றும்’ பலர் அப்போது கூறினர். புத்தளத்தில் வாழும் மக்கள் இந்தப் பிரதேசத்துக்கு வந்து, ஒருபோதுமே குடியேறமாட்டார்கள் என்றும் எமக்கு அடித்துக் கூறினார்.

எனினும், நாம் எடுத்த முயற்சிகளில் பின்வாங்கவில்லை. இந்தக் கிராமங்கள் இப்போது வளம்கொழிக்கும் நிலங்களாக மாற்றமடைந்துள்ளன. வெறுமனே வாழிடமாக மட்டுமின்றி வருமானம் தருகின்ற, வாழ்வாதார தேவைகளுக்கு பயன்படுகின்ற கிராமங்களாக இவை செழிப்படைந்துள்ளன. புத்தளத்திலும் தென்னிலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் நீண்டகாலமாக வாழ்ந்த நீங்கள், இந்தப் பிரதேசத்துக்கு குடியேற வந்தபோது, காணியில்லாத பிரச்சினையே பூதாகரமாக இருந்தது. பூர்வீகக் கிராமங்களில், முன்னர் இருந்த இடங்களில் குடியேறியவர்களுக்கு, மேலதிகமாக இருந்தவர்களை தவிர, இளந்தலைமுறையினரை குடியேற்ற வேண்டிய சூழ்நிலை இருந்ததினாலேயே, அரசின் முறைப்படியான அனுமதியுடன், சட்டபூர்வமாகவே புதிய கிராமங்களை நிர்மாணித்தோம்.

இவ்வாறான மீள்குடியேற்ற செயற்பாடுகள், எமக்கு எதிர்வினைகளை உருவாக்கின. நாம் காடழிக்கும் மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களின் மத்தியில் எம்மை பற்றிய விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டனர். சிங்கள சகோதரர்களின் உள்ளங்களில், மிகவும் நாசுக்காக இனவாத விஷத்தை புகுத்தினர். இதன் காரணமாக நான் ஒரு இனவாதியாகப் பார்க்கப்பட்டேன்.

இன்றும் அந்தக் கஷ்டங்களிலிருந்து எம்மை அவர்கள் விட்டபாடில்லை. நாம் அனுபவிக்கும் துன்பங்களை விலாவாரியாக உங்களுக்கு தெரிவிக்க முடியாவிட்டாலும், நீங்களும் அதனை நன்கு அறிவீர்கள். பேரினவாதத்தின் தேர்தல் வெற்றிக்கு எம்மையே பேசுபொருளாகப் பயன்படுத்தி, தினமும் ஏதாவது  ஒரு குண்டை தூக்கிப்போடுகின்றனர். அதன்மூலம், எம்மை நிலைகுலைய வைத்து, எமது தேர்தல் வேற்றியை தடுப்பதும், சமூகத்துக்கான குரலை நசுக்குவதுமே இனவாதிகளின் குறிக்கோள். நாங்கள் தேர்தலுக்காக மட்டும் உங்களிடம் வருபவர்கள் அல்லர். கடந்த காலங்களிலும் வாக்குகளுக்காக மட்டும் வந்து, உங்களிடம் கையேந்தியவர்கள் அல்லர். உங்களுடனேயே வாழ்ந்து, உங்கள் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து, அதன்வழி பணியாற்றுபவர்கள்.

கடந்தகாலம் போலன்றி, இதுவொரு பெரிய சவாலான காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. எம்மை ஏமாற்றி அரசியல் செய்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம். இந்த மண் கறுப்பா அல்லது சிவப்பா என்று கூட தமது வாழ்நாளில் கண்டிராதவர்கள், இப்போது மட்டும் இந்தப் பக்கம் தலைகாட்டுவது ஏன்? நமது ஒற்றுமையின் மூலமே, எதிர்காலத்தில் பலமான ஒரு அடித்தளத்தை நாம் மேற்கொள்ள முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *