வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் 201 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழிலிருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த வாகனத்தை வவுனியா பறயநாலங்குளம் சந்தியிலுள்ள சோதனைச் சாவடியில் வழிமறித்த பொலிஸார், சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொறுப்பிலெடுத்த பொலிஸார் சாரதியைக் கைது செய்தனர்.
யாழ் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து குறித்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளமை தெரிய வருகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 2 கோடியே 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் ஆலோசனையில் பொலிஸ் அத்தியட்சகர்களான திஸ்சலால் சில்வா, வீரக்கோன் ஆகியோரின் வழிகாட்டலில் பறயனாலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உப்புல் ராஜபக்ஷவின் தலைமையில் உபபொலிஸ் பரிசோதகர்களான சமரசிங்க, ஆனந்த பொலிஸ் சாஜன்ட்களான குணரத்ன, ஹேரத், ஜெயசிங்க, பண்டார, சதுரங்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான ரதீசன், சேனாரத்ன, மாலக்க, குமார, ஜயவர்த்தன ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவரை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.