எனது முகநூலில் ஆயிரக்கணக்கான உறவுகள் உள்ளன. சில நூறு உறவுகள் தான் நெருக்கமான தொடர்பிலிருக்கும். அவ்வாறு எனக்கு மிக நெருக்கமான சகோதரன் பற்றியதே இந்த சம்பவம்.
இச் சம்பவம் நடைபெறும் போது நான் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்தேன். எனக்கு மிக நெருக்கமான முகநூல் நண்பர்களில் ஒருவர் கொழும்பு வரப் போவதாக சொன்னார். ” சரி வாருங்கள் ” என கூறியிருந்தேன். அவரும் வந்தார். அன்று சில நண்பர்களோடு தலைவர் றிஷாத் பதியுதீனை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தேன்.
தலைவர் றிஷாத் பதியுதீனை சந்திக்க நேரம் கேட்டு மெசேச் அனுப்பினேன். அவரின் பதிலை எதிர்பார்த்து காலி முகத்திடலில் அந்த நண்பர்களோடு நேரத்தை கழித்தேன் ( காலி முகத்திடலானது கைத்தொழில் அமைச்சுக்கு அருகாமையில் உள்ளது ). அப்போது கொழும்பு வந்த எனது நண்பனும் என்னோடு இருந்தார். அவரும் என்னோடு உள்ளதாக நான் தலைவரிடம் சொல்லியிருக்கவில்லை. தலைவர் எங்களை சந்திக்க நேரம் தந்தார்.
என்னைத் தேடி வந்த நண்பனை விட்டு விட்டு செல்லவும் முடியாது. அழைத்து சென்றால், ” ஏன் சொல்லாமல் சிறு பிள்ளைகளை அழைத்து வந்தீர்கள்?” என கேட்டால் என்ன சொல்வது (அவர் அவ்வாறு கேட்பவரல்ல. இருந்தும் நாம் அது பற்றி சிந்திக்க வேண்டுமல்லவா? ). குறித்த நண்பன் ஏ.எல் எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தவர். சிறிய வயதும் கூட. ஒரு கெபினட் அமைச்சரை சந்திப்பதற்கென்று ஒரு முறையுள்ளதல்லவா? அவரும் தலைவரை சந்திக்க வேண்டும் என்ற தீவிர ஆசையுள்ளவர். எங்கு செல்லப் போகிறோமென சொன்னால் நிச்சயம் தானும் வருகிறேன் என்பார். ஒரு தர்மசங்கடமான நிலை. நடப்பது என்னவென்று பார்ப்போம் என அவரையும் எங்களோடு அழைத்து சென்றோம். தலைவரின் பண்பும் எங்களுக்கு தெரியுமல்லவா..?
அனைவரும் தலைவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். தலைவர் அனைவரையும் விசாரித்தார். குறித்த உறவின் நிலையையும் கேட்டறிந்தார். குறித்த உறவு பொருளாதார ரீதியில் மிக சிக்கலான நிலையில் இருந்ததால், தொழில் வாய்ப்பொன்றை நேரடியாக கேட்காது சூசமாக கேட்டார் ( தொழில் வாய்ப்பு வழங்க வேண்டிய ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ) நாங்களும் அவருக்கு தொழிலொன்று வழங்கினால் நல்லம் என கூறினோம். தலைவரும் என்னால் முடிந்த உதவியை செய்வேன் என கூறினார். அன்று அவரிடம் தலைவரிடம் வழங்க சுய விபரக்கோவை கூட இருக்கவில்லை. அதற்காக அவர் வரவில்லையே!
இது நடந்து சில நாட்களின் பின் மீண்டும் அமைச்சுக்கு சுய விபரக் கோவையோடு சென்ற அந்த நண்பன், அங்குள்ளவர்களிடம் பேசிவிட்டு சுய விபரக் கோவையை வழங்கிவிட்டும் வந்தார். இது நடந்து சுமார் ஒரு மாத காலத்துக்குள் அவர் தொழில் வாய்ப்பை பெற்றார். இவர் அ.இ.ம.காவின் முக்கியஸ்தர்கள், தலைவருக்கு நெருங்கிய பலருடன் தொடர்பில் இருந்ததால், அவர்களும் இவருக்கு பரிந்துரை செய்திருப்பார்கள் என நினைக்கின்றேன். நான் ஒருபோதும் இவ்வளவு விரைவாக அவர் தொழில் வாய்ப்பை பெறுவார் என நினைக்கவில்லை.
இன்று எத்தனையோ இளைஞர்கள் தொழிலுக்காக தசாப்த கணக்கில் அரசியல் வாதிகளின் காலடியில் கிடக்கின்றனர். தொழில் வழங்கினால் எம்மை விட்டு சென்று விடுவான் என நினைத்து, தொழில் வழங்காமலிருக்கும் அரசியல் வாதிகளும் எம்மிடையே உள்ளனர். இந் நிலையில் மிகச் சாதாரணமாக தொழில் வாய்ப்பை பெற்றிருந்தார் எனது இந்த நண்பன். அதுவும் சிறு வயதில். இந்த தொழில் வாய்ப்பு கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னரே வழங்கப்பட்டிருந்தது. தொழில் பெற்ற அந்த எனது நண்பன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மயிலை ஆதரித்தவரல்ல என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த சம்பவத்தின் மூலம் ஏழைகளின் தோழனாக தலைவனை கண்டேன். சிந்திப்போம்.. செயற்படுவோம்…
இது உண்மையா என யாராவது உறுதி செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.