ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த சில அவசியமற்ற செயல்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிங்கள வானொலி ஒன்றில் நேற்றிரவு ஒலிப்பரப்பான நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசியலுக்குள் வர வேண்டும் என்பதற்காகவே நான் கொழும்பு மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
திகாமடுல்லை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய பொறுப்பை ஏற்று அந்த மாவட்டத்தில் கட்சியின் வாக்குகளை 24 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளேன்.
முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்தே நாங்கள் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டோம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இனவாதிகள்.முஸ்லிம் காங்கிரஸ் இனவாதத்துடன் உருவான கட்சி. முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டியே அவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர்.
முஸ்லிம்களின் உரிமைகளுக்காவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் அந்த மக்களின் இன உணர்வை தூண்டுவார்கள்.
இதனால், முஸ்லிம் காங்கிரஸுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையும் போது பௌத்த மக்கள் எங்களிடம் இருந்து சற்று விலகுவார்கள். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சிங்களவர்களுக்கு எதிரான கட்சியாக கருதுவார்கள்.
கிழக்கு மாகாண சபையில் நான் அங்கம் வகித்தேன். இதனால், நடந்த விடயங்கள் எனக்கு தெரியும்.
கிழக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் முழு நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்களாகிய நாங்கள் சிறுபான்மை இனமாக மாறி விடுகிறோம்.
எனினும் எந்த இடமாக இருந்தாலும் இனவாதம் அவசியமில்லை எனவும் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.