அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, தேர்தல்கால விளம்பரமாக கடும்போக்கு சக்திகள் பாவித்து வருவது, கடும் கவலையளிப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கை கடும்போக்கர்களை உசுப்பேற்றி ஆட்சி, அதிகாரத்தை தக்கவைக்கும் புதிய போக்குகள், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியலுக்காக சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வன்மங்களை வளர்த்துவரும் விசித்திர போக்குகள், பல்லினத்தவர் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் சிறுபான்மை சமூகங்களை அச்சத்திற்குள்ளாக்குவது, கறைபடிந்த எமது நாட்டின் பழைய வரலாறுகளைப் புதுப்பிக்க முயலும் அரசியல் உபாயங்களாக உள்ளதாகவும் சிறுபான்மை சமூகத்தின் புத்திஜீவிகள் கவலை வௌியிட்டுள்ளனர்.
தேர்தல் வாடைகள் களைகட்டும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான அபாய நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சிவில் அமைப்புக்கள், அரசியல் தலைமைகள், மத ஸ்தாபனங்கள் அவசரமாகச் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளிவைத்து, முஸ்லிம் அடிப்படைவாதம் வளர்வதாகக் காட்டும் இவர்களின் யுக்திகள் தென்னிலங்கையின் வாக்கு வேட்டைகளுக்கு இலகுவாக இருந்தாலும், இங்கு வாழும் சிறுபான்மையினரை தேசப்பற்றிலிருந்து அந்நியப்படுத்திவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக முன்வைக்கும் இவர்கள், இதுவரைக்கும் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. வில்பத்து வழக்கொன்று தொடர்பில் விசாரணை செய்த நீதிபதியொருவர், தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே, இறுதி நேரத்தில் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
விஷேடமாக இனவாதப் பாய்ச்சலில் முதலிடம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச கூட, இவ்விடயத்தில் தடுமாறுவதாகவே தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சின் கீழிருந்த நிறுவனங்களில், 22 நிறுவனங்கள் தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சுக்குக் கீழ் உள்ளன. இந்நிலையில், இதுவரை இதில் எந்தவொரு நிறுவனங்களிலாவது ஊழல் இடம்பெற்றுள்ளதாக, இவர்களால் நிரூபிக்க முடியாதுள்ளது. இவ்வாறு நிரூபிக்க முயலும் இவர்களது எத்தனங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
டொக்டர் ஷாபியின் விடயங்கள் உள்ளிட்ட பலதும், கடும்போக்கர்களைத் திருப்திப்படுத்தும் இஸ்லாமிய அடிப்படைவாத கற்பனைப் பாத்திரங்களாகவே உள்ளன. குருநாகல் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் பரீட் அவர்களையும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைத்து கற்பனை செய்யப்பட்ட காரணங்களே அவரை அழுத்தத்துக்குள்ளாக்கி, பதவி விலகச் செய்தது. இவ்வாறான கற்பனை பாத்திர முயற்சிகளை முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தலையில் திணித்துவிடும் பெரிய திட்டங்களை காடுபோக்கர்கள் அரங்கேற்றுகின்றனர்.
எனவே, இந்நிலைமைகளைப் புரிந்து, சமூகத் தலைமையைக் காப்பாற்ற முனைவதுதான் கடும்போக்கர்களுக்கு ஜனநாயக ரீதியாக சிறுபான்மை சமூகம் வழங்கும் பதிலடி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இல்ஹாம்-