Breaking
Sun. Nov 24th, 2024

சம்மாந்துறை தவிசாளர் நௌசாதை வைத்து மு.காவினரால் ஒரு அரசியல் வியூகம் வரையப்பட்டுள்ளது. தவிசாளர் நௌசாத் கட்சி மாறிவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த வதந்திகளெல்லாம் நன்கு திட்டமிடப்பட்டவைகள். இம் முறையும் மயில் சம்மாந்துறையில் தோகை விரித்தாடிடக் கூடாது என்பதற்கே இத்தனை பாடும். சம்மாந்துறை மயிலின் இதயம். அதனை குத்தி கிழித்துவிட்டால்..? இவ்விடயத்தில் மு.காவினரின் சதியை இறைவன் மக்களுக்கு புடம் போட்டு காட்டியுள்ளான்.

அண்மையில் தவம் எழுதிய கட்டுரையொன்றில் அ.இ.ம.காவானது தவிசாளர் நௌசாதை பா.உறுப்பினராக்க விரும்பவில்லை என கூறி தவிசாளர் நௌசாத்துக்கு கயிறு வீசியிருந்தார். தவம் கயிறு வீசி பிடிக்குமளவு தவிசாளர் நௌசாத் அரசியல் கத்துக்குட்டியல்ல. அவர் அரசியலில் திமிங்கிலம். சம்மாந்துறையில் தவிசாளர் நௌசாத் மு.காவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஒரு கதை பரப்பப்பட்டுள்ளது. இந்த கதையாடல்களை செய்வோருக்கு புலி பசித்தாலும் புல்லையுண்ணாதென்பது தெரியாதோ? இந் நிலையில் மு.பா.உ மன்சூர் தனது முகநூலில், அவரும் நௌசாதும் ஒன்றாக பயணிக்கும் புகைப்படத்தை இட்டிருந்தார். இதற்கு பின்னால் பாரிய அரசியல் வியூகமுள்ளதென்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. இந்த புகைப்படம் கடந்த வருடம் எடுக்கப்பட்டது. நெல்லுச்சேனை வட்டை அறுவடை விழாவுக்கு சம்மாந்துறை அரசியல் வாதிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படமே நேற்று பர பரப்பான புகைப்படம்.

இந்த புகைப்படம், ” மா சா அல்லாஹ் ” என்ற கொமன்டோடு நின்றிருந்தார் மு.காவின் அரசியல் வியூகம் வெற்றியளித்திருக்கும். தவிசாளர் நௌசாத் மறைமுகமாக மு.காவுக்கு ஆதரவளிகிறார் என்ற சிந்தனை மக்களிடத்தில் இருந்திருக்கும். அவர் அவ்வாறு ஆதரிப்பவரல்ல என்பது வேறு விடயம். எதுவென்றாலும் முகத்துக்கு நேரே பேசும் பண்பு கொண்டவர். மு.காவினர் ஒரு படி மேல் சென்று கட்சி மாறிவிட்டதாக நீளக் கட்டுரையெல்லாம் வரைந்திருந்தனர். காய்ந்து கிடந்த மாடுகள் பசும் புல் கண்டால் என்ன செய்யும்? ஐய்யோ பரிதாபம்.

தவிசாளர் நௌசாத் கட்சி மாறுவதாக இருந்தால், யாரோ ஒருவர் சொல்லி யாரும் அறிய வேண்டிய அவசியமிருக்காது. அவரே கட்சித் தலைவரிடத்தில் நேரடியாக சென்று, தான் இவ்வாறான காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகப் போவதாக கூறுவார். இதுவே அவர் இதுவரையும் காண்பித்த நாகரீக பண்பு. இதன் பிறகு காட்டப் போகும் பண்பும் கூட. அவர் சொல்லும் வரை அவரது முடிவு பற்றி யாரும் ஊகிக்கவும் இயலாது. இவ்வாறான பண்புடையவரை புகைப்படம் ஒன்றை வைத்து கட்சி மாறியதாக கூற இயலுமா? எவ்வளவு அபத்தமிது.

சம்மாந்துறை தவிசாளர் நௌசாதுக்கென்று சிறப்புண்டு. அவர் அனைத்து விடயங்களிலும் சமூக நலனுக்கு முன்னுரிமை வழங்குவார். அந்த அடிப்படையில் அவர் மயில் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் மரக் கட்சியினரோடு ஒத்துழைத்து பயணித்தார். அவர்களது செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார். இது அரசியல் நோக்கம் கொண்ட அரசியல் வாதிகளுக்கு புதினமாக இருக்கலாம். இதுவே அவரது பண்பு. அவரது இவ்வாறான பண்புகளிலொன்றுதான் இந்த புகைப்படமும். அவரின் கட்சித் தலைவரும் இதே பண்பு கொண்டவரென்பதால் பிரச்சினை எதுவும் எழுந்திருக்கவில்லை.

அவரது நற் பண்புகள் எழுதி படிக்க வேண்டியவைகள். இந்த நல்ல பண்பைத் தான் மு.காவினர், தங்களது அரசியலுக்கு சாதகமாக முனைந்தனர். இப்போது தன்னை சிலர் அரசியலுக்கு பயன்படுத்த முனைவதை அவரும் உணர்ந்து சுதாகரித்துள்ளார். அதன் வெளிப்பாடே, ” இது கடந்த வருடம் நெல்லுச்சேனையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ” என்ற அவரது கொமண்டையும் நோக்க முடிகிறது. நல்லவனுக்கு காலமில்லை தானே! தவிசாளர் நௌசாதை வைத்து ஒரு அரசியல் சித்து விளையாட்டு வரையப்பட்டுள்ளதென்பதை மக்களும் உணர்ந்துள்ளனர். இதனை நேற்றைய புகைப்பட சித்து விளையாட்டே தெளிவு செய்துள்ளது.

மு.காவினரே! நன்றாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அவர் இம் முறை மு.காவை ஆதரிக்க மாட்டார். உங்கள் சித்து விளையாட்டுக்களை நிறுத்தி, வேறு வகையில் முயற்சிக்கவும். வேண்டுமென்றால் கனவில் மகிழ்ந்து கொள்ளுங்கள்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *