Breaking
Thu. May 9th, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்
தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து,தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக
பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர்.

அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச்
சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரமும் விவாதிக்கப்பட்டது.


சுமந்திரனைப் பதவி விலக்க வேண்டும் என்று நாம் தனிப்பட்ட காரணங்களுக்காக வலியுறுத்தவில்லை, ஆனால், அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பைத் துறக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன், நேற்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவினால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


“சுமந்திரனைப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால், அவர் தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து பேச வேண்டும்” என்று நேற்றைய கூட்டத்தில் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேட்டி
கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்தும் எனப் பரவலாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும் சம்பந்தன் கூறினார்.


“தமிழ் அரசியல் நெருக்கடியான சூழலில் இருக்கும் இன்றைய வேளையில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்” என்று இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.


“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்” என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது
கூறினார்.


எனினும், “இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளைப் புரிந்துகொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *