முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சபாநாயகர் போன்றோருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு மாதாந்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமான எரிபொருள் மானியமும் வழங்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்கையில் அரசாங்கத்திற்கு அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கோருவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் அல்லது மாத சம்பளத்தை நாட்டின் பொருளாதாரத்திற்காக வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுதந்தர விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்புடன் ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுதந்தரவினால் தனிப்பட்ட கோரிக்கை எனத் தெரிவித்து அரச ஊழியர்கள் தமது மாதாந்த சம்பளத்தை அல்லது அதில் ஒரு பகுதியை வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்திற்காக வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச திணைக்களங்களையும் உள்ளடக்கி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.பி.ஜயசுந்தர தனிப்பட்ட ரீதியில் இந்த கோரிக்கையை விடுப்பதானால் தனது தனிப்பட்ட முகவரியையே கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அரச அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இவ்வாறான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு இவ்வாறான கோரிக்கையை விடுப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது.
அவரால் எவ்வித அரச பதவியும் வகிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் முன்னரே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான ஒரு நபரால் எவ்வாறு ஒழுக்கமற்ற இந்த கோரிக்கையை முன்வைக்க முடியும் ? தனிப்பட்ட முறையில் கூட அவரால் இந்த கோரிக்கையை முன்வைக்க முடியாது. இது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. எனவே இதற்கு நாம் கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும், சபாநாயகருக்கும் தனிப்பட்ட தேவைக்காக வாகனங்களை அரசாங்கம் வழங்குகின்றது. இதற்காக ஒரு இலட்சம் ரூபா அறவிடப்பட்டாலும் அவர்களுக்கு எரிபொருள் மானியம் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.
அதற்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கான எரிபொருள் மானியத்திற்காக மாத்திரம் மாதாந்தம் 200 இலட்சத்துக்கும் அதிக நிதியைச் செலவிடும் இந்த அரசாங்கத்திற்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?
அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 3200 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிடுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை சற்று காலம் தாழ்த்தலாம். அதனை விடுத்தி இவற்றுக்கான அவசரம் தற்போது ஏற்படவில்லை.
உலக சந்தையில் எரிபொருள் தாங்கிகளின் விலை எதிர்பாராதளவிற்கு குறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் பழைய விலைக்கே வழங்கப்படுகிறது. மார்ச் 17 ஆம் திகதி விசேட உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய நாம் எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கு பதிலாக பருப்பு, டின் மீன் நிவாரணம் வழங்குகின்றோம் என்று கூறுகின்றார். ஆனால் அண்மையில் இவற்றுக்கான நிவாரண விலையும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி ஊழல் காரணமாக டிரில்லியன் கணக்கில் நாடு நஷ்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த தொகையுடன் ஒப்பிடும் போது அரச ஊழியர்கள் பெறும் சம்பளம் மிகக் குறைவானதாகும். எனவே மத்திய வங்கி பிணை முறியில் மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெற்று அதில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
இதற்கு முன்னர் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போதும், வடக்கு கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போதும் சேர்க்கப்பட்ட நிதி நிவாரணங்கு என்ன ஆயிற்று ? ஏனைய பொது மக்களைப் போன்றே அரச ஊழியர்களும் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை. எனவே இந்த கோரிக்கை சாதாரணமானதல்ல. நாம் இதனை ஏற்றுக் கொள்ளப் போவதுமல்ல என்றார்.