“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.
அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம்.” இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் மேலும் தெரிவித்ததாவது,
“வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவேண்டும். இது விடயத்தில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.
ஆனால், தமிழ் கைதிகளின் விடுதலை, அதிகாரப் பகிர்வு ஆகியன தொடர்பில் கூட்டமைப்பால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் விழிப்பாகவே இருக்கவேண்டும்.
கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இதற்கு முன்னரும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பது வேறுபட்டது.
ஆகவே, விழிப்பாக இருக்கவேண்டும். இது விடயத்தில் ராஜபக்ஷ அரசு எவ்வாறு செயற்படும் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
கூட்டமைப்புக்கு தேவையானவற்றை செய்வதற்கு முற்பட்டால் சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவை அரசு இழக்கநேரிடும்.
பெரும்பான்மையான மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, கூட்டமைப்பின் ஒத்துழைப்பை பெறுவதற்கு அரசு முயற்சிக்குமானால் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.
நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கே கூட்டமைப்பு முயற்சிக்கிறது. இதற்கும் நாம் இடமளிக்கமாட்டோம்.
ஆகவே, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை, போர் முடிவடைந்த பின்னர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கியிருக்கவேண்டும். அதனை மஹிந்த அரசு செய்யவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க அன்று மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தார். அவ்வாறு செயற்பட்டிருக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.