மக்களை பாதிக்காத வகையில் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
மன்னாரில் வெவ்வேறு விலைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதற்கு அமைவாக நிவாரண உதவிகளுக்கு வெள்ளைச் சம்பா, வெள்ளை நாடு அரிசி அகிய இரண்டையும் 95 ரூபாவிற்கு விற்பனை செய்யவும், சில்லரை விலைக்கு 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் முழுவதும் இந்த விலை தான் பின்பற்றப்படும். மேலும் சிவப்பு கீரிச் சம்பா 100 ரூபாவிற்கும், வெள்ளை கீரிச்சம்பா 115 ரூபாவிற்கும் மொத்தமாக கிடைக்கும்.
சில்லரை வியாபாரத்திற்கு சிவப்பு கீரிச் சம்பா 115 ரூபாவிற்கும், வெள்ளை கீரிச்சம்பா 120 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
மக்களின் நாளாந்த தேவைகளுக்கு குறித்த விலைகளில் விற்பனை செய்யப்படும். குறித்த கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பனை செய்ய முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக அதன் திட்ட பணிப்பாளர் என்னுடன் கலந்துரையாடினார். குறிப்பாக அவர்கள் கூடுதலான வாக்குறுதி வழங்கி உள்ளனர்.
மக்களை பாதிக்காத வகையில் இத்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்ததுடன், அதற்கு எங்களுடைய ஒத்துழைப்பை கோரியுள்ளனர்.
உரிய அனுமதிகளுக்கு அமைவாக குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதியின் விசேட செயலணியின் பணிப்பிற்கு அமைவாக குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கி உள்ளோம்.
எனினும் அவர்கள் மக்களை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக குறித்த செயல்பாடு முன்னெடுக்கப்பட உள்ளது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பூரண பாதுகாப்பு குறித்த பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.