நாங்கள் இந்த மண்ணிலே நீண்ட காலமாக பல உயிர்களை தியாகம் செய்து எமது மக்களின் உரிமைக்காக போராடி என்ன நோக்கத்திற்காக இந்த மண்ணில் மடிந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை எங்களது பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
எருவில் இளைஞர் கழகத்தின் 40வது நிறைவை ஒட்டி சித்திரைப் புதுவருட கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகள் நேற்று முன் தினம் (24) எருவில் கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் இளைஞர் கழகத்தலைவர் தி.யாதவரூபன் தலைமையில் இடம்பெற்றது.
இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று த.தே.கூட்டமைப்பு அபிவிருத்தி செய்யவில்லை மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்கள் என சிலர் தமிழர் பிரதேசங்களுக்குள் ஊடுருவி பிரசாரம் செய்கின்றார்கள். குறிப்பாக பிரதி அமைச்சர் அமீர் அலி எங்களுக்கு அறிவுரை கூற முற்படுகின்றார் அவருக்கு தெரியாது எமது இனம் அபிவிருத்திக்கு அடிமைப்பட்ட இனம் அல்ல எமது இனத்தின் அபிலாசைகளை பெறும் வரை நாங்கள் எங்களது வேலைகளை செய்து கொண்டுதான் இருப்போம்.
தற்போது அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவின் நிமித்தம் எங்கள் மக்களுக்கு தேவையான சில அபிவிருத்திகளை முன்னெடுத்துக்கொண்டுதான் வருகின்றோம், நாங்கள் எங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.
நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதனை இவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் அதனை விடுத்து எந்த அரசாங்கம் வந்தாலும் அதற்குள் ஊடுருவி அதில் கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிப்பவர்கள் நாங்கள் கிடையாது.
இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டு பிரதி அமைச்சர் பதவியினை எடுத்துக் கொண்டு எங்கள் தமிழ் பிரதேசங்களுக்குள் வந்து எம்மைப் பற்றி கதைப்பதற்கு இவருக்கு எந்த அருகதையும் கிடையாது என்பதனை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இவர் மக்கள் மத்தியில் சென்று வாக்குப்பெற்று அரசியலுக்கு வரவேண்டும், அதை விடுத்து தமது மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது அமைச்சராக இருக்கும் அமீர் அலி போன்றோர் எங்களுக்கு ஆலோசனை கூற முற்படக்கூடாது.
இந்த நாட்டிலே வருகின்ற குறிப்பாக மகிந்த அரசாங்கமும் எங்களுக்கு முன்னுக்கு பின்னாக வந்து உங்களுக்கு தேவயான அமைச்சுப் பதவிகளையும், பிரதி அமைச்சுப் பதவிகளையும் தருகின்றோம் எங்களுடன் வந்து இணையுங்கள் என்று பலமுறை அழைப்பு விடுத்தார்கள்.
அதே போன்றுதான் இன்று உள்ள அரசாங்கத்திலும் எங்களுக்கு அமைச்சுப் பதவி வேண்டும் என்றால் எடுத்து மக்களது தேவைகளையும், அபிவிருத்திகளையும் செய்திருப்போம்.
ஆனால் எங்களது நோக்கு அமைச்சுப் பதவி அல்ல, மாறாக எங்களது தேசியம் சார்ந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்று இந்த நாட்டில் நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே. அமீர் அலி இந்த பாராளுமன்றத்திற்கு எப்படி வந்தார் என்பதனை ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
எங்களது பகுதியில் இருக்கின்ற தமிழ் பிரதிநிதிகள் பெற்றுக் கொடுத்த வாக்குகளை வைத்துக் கொண்டுதான் அவர் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார், அப்போது மகிந்த ராஜபக்ச போட்ட பிச்சையை எடுத்துக் கொண்டுதான் இவ்வாறான நிலைக்கு அவரால் வரமுடிந்தது.
நாங்கள் அபிலாசைகளை விடுத்து எங்களது இனம் இவ்வளவு காலமும் பட்ட வேதனைகளை மறந்து செயற்படுவோமாக இருந்தால் அமீர் அலி இன்று அவரது கிராமத்திற்குள் முடக்கப்பட்டிருப்பார். நாங்கள் தரமான அபிவிருத்திகளை உங்களைக் கொண்டு செய்திருப்போம்.
ஆனால் எங்களது தியாகங்கள் கொச்சைப்படுத்தமால் அந்த தியாகத்திற்கான தீர்வுகள் எம்மை வந்தடையும் வரை பொறுத்திருந்து அபிவிருத்தி பணியினை முன்னெடுப்போம். இன்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு மூலம் எங்களால் இயன்ற மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுப்போம்.
இன்று தமிழ்ர் பகுதிகள் எங்கும் சித்தரை புதுவருட நிகழ்வுகளை விளையாட்டு கழகங்கள் கிராமங்கள் தோறும் நடத்தி வருகின்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினை பொறுத்தவரையில் இன்று பல வேலைத்திட்டங்களை இளைஞர்கள் சார்பாக நடத்தி வருகின்ற போதும் சில பிரச்சினைகளும் இங்கு இருக்கத்தான் செய்கின்றது.
குறிப்பாக கடந்த காலங்களில் இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு யூ.எஸ்.ஏ என்ற தொண்டர் நிறுவனத்தினால் கொடுக்கப்பட்ட 50 இலட்சத்திற்கும் மேலான தொகையை கொண்ட இசைக்கருவிகள் உரியவர்களுக்கு வழங்கப்படாமல் அன்றிருந்த சில அரசியல் வாதிகள் தங்களது தேவைகளுக்காக தூக்கிச் சென்று விட்டார்கள். அது தொடர்பாக உரிய அரச அதிகாரிகள் இன்றும் கூட வாய்திறக்காமல் மௌனம் காத்து வருகின்றார்கள்.
நாங்கள் இது சம்பந்தமாக உரியவர்களுடன் பேசி வருகின்றோம். இதற்கு முன்னரும் இந்த மாவட்ட சம்மேளனத்திற்கு பஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டிருந்தது ஆனால் சில அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் பஸ் வண்டி வழங்கப்படவில்லை என்று கூறினார்கள்.
நாங்கள் அது தொடர்பான ஆவனங்களை சமர்ப்பித்து அந்த பஸ் வண்டியை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம், நாங்கள் இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மௌனம் காக்கமாட்டோம்.
நல்லாட்சி என்று கூறப்படும் இந்த ஆட்சியில் லஞ்ச ஊழல்களுக்கு இடமளிக்க மாட்டோம் என்று கூறும் அரசாங்கம் தேசிய சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற லஞ்ச ஊழல்களையும் கண்டு பிடிக்க முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.