ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் புதிய பாராளுமன்றம் கூடும் வரை நிதியை செலவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளுக்காக பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டியது அவசியம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் புதிய பாராளுமன்றம் கூடும் வரை எவ்வித நிதியையும் செலவிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. புதிய பாராளுமன்றத்தை எப்போது கூட்ட முடியும் என்பதை கூற முடியாது. இது நெருக்கடி நிலை. பழைய பாராளுமன்றத்தை மீளக் கூட்டி தேவையான நிதியை பெறுவதன் மூலமே இந்த நெருக்கடியை தவிர்க்க முடியும்
என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிதியை செலவிடுவதற்கான அதிகாரம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரசாங்க சேவைகளை பேணிச் செல்வதற்கு தேவையான நிதியை ஒருங்கிணைந்த நிதியத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் போதிய நிதி வசதி உள்ளதா என்பது தொடர்பில் மக்கள் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நிலைமையை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசியல் இலாபம் பெறுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய அரசாங்கம் நிதியைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்கு நல்லாட்சி குழுவினர் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் அதிகாரம் தொடர்பில் சட்டவாதங்களை முன்வைத்து நாட்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியை கண்டிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் அவசரக் கூட்டமொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அழைத்துள்ளார்.
இந்தக் கூட்டம் இன்று காலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது