Breaking
Sun. Nov 24th, 2024

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும், வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.


வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து தெரிவித்த அவர்,
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த தாக்கத்திற்குள்ளாகியதாக எவரும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் அவ்வாறனவர்களை இனம்காண்பதற்கான வசதிகள் இங்கு உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக அதிகமானோர் பாதிக்கப்பட்டால் அவர்களை பராமரிக்ககூடிய அதிதீவிர பிரிவின் கட்டில்கள் வடக்கில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.


வடக்கில் யாழ் வைத்தியசாலையில் 13 கட்டில்களும் வவுனியா வைத்தியசாலையில் 4 கட்டில்களும் முல்லைதீவில் 2, கிளிநொச்சியில் 3 என மொத்தம் 22 கட்டில்களே இங்கு இருக்கின்றது. அவையும் பாவனையில் உள்ளது. இப்படியான சூழலில் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டால் எப்படி மக்களை காப்பாற்ற போகின்றோம் என்பது இங்கு பாரிய பிரச்சினை.


அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை இனம் காணக்கூடிய பிசிஆர் என்ற இயந்திரம் வடக்கில் எங்கும் இல்லை. எனவே வவுனியா மற்றும் யாழ் வைத்தியசாலைகளிற்கு அந்த வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தற்போது அனைவரும் அணிந்துள்ள முக கவசம் கூட தகுதியற்றது. அதனூடாக வைரஸ் இலகுவாக உட்செல்லும் வாய்ப்புள்ளது.

குறித்த வைரஸ் கண்ணின் ஊடாக கூட செல்லும் நிலை உள்ளது. எனவே ‘என்95’ என்ற முககவசமே தரமானது.
எனவே வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு கூட அந்த கவசத்தை வழங்கும் நிலையில் இந்த அரசாங்கம் இல்லை.எனவே வைத்தியசாலை ஊழியர்களிற்கும் இது வழங்கப்படவேண்டும். இல்லாவிடில் அவர்களுடாகவே இது பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தவிடயத்தில் அரசு வெளிப்படை தன்மை இன்றியே செயற்பட்டுவருகின்றது.
விமான பயணிகளை வவுனியா பலாலி, கேப்பாபிலவு, இரணைமடு போன்ற விமானதளங்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல்கள் எவையும் சுகாதாரபிரிவினருக்கு வழங்கப்படவில்லை.


சுகாதாரவைத்திய அதிகாரிகள் அவர்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. நாம் படையினரின் செயற்பாடுகளை மதிக்கின்றோம். எனினும் இது வெளிப்படை தன்மையானதல்ல. எனவே மாகாண மட்டத்தில் ஒரு விசேட செயலணி உருவாக்கப்பட வேண்டும்.
அதில் இராணுவத்தினரும் உள்வாங்கப்பட வேண்டும். அதில் தீர்மானம் எடுப்பவர்களாக சுகாதார பிரிவினர் இருக்க வேண்டும். இராணுவ நகர்வுகள் மூலம் மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது.


அத்துடன் பிரதேச தனிமைப்படுத்தல் முறை உருவாக்கப்பட வேண்டும். வடக்கில் தற்போது குறித்த தொற்று எவருக்கும் இல்லை. எனவே மக்களை சுதந்திரமாக வாழவிட்டு வடமாகாண எல்லைகள் அனைத்தும் இராணுவத்தைகொண்டு மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கப்படலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்க வேண்டிவரும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *