(கதீஸ்)
வவுனியா நகரை அண்மித்து அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதால் அவை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீன் ரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ வெளியிட்ட விசேட அறிவிப்பையடுத்து அதனை பொதுமக்கள் கொள்வனவு செய்வதும் நேற்றுஅதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில் வவுனியா நகரை அண்மித்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் காசாளர் மேசையின் கீழ்ப்பகுதியில் மீன் ரின்கள் இருந்தபோதும் அவை முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு பொது மகனொருவர் தகவல் வழங்கியதனையடுத்து சதொச விற்பனை நிலையத்துக்கு விரைந்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது களஞ்சிய அறையிலிருந்து ஒரு பெட்டி மீன் ரின்னைக் கைப்பற்றியதுடன் காசாளர் மேசையின் கீழ் பகுதியில் இருந்த மீன் ரின்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட மீன்டின்களை மக்களுக்கு விற்பனை செய்யுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சதொச உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்தமையையடுத்து பொது மக்களுக்கு மீன் ரின் விநியோகிக்கப்பட்டது.