அன்புக்குரிய நண்பர்களே!
நேற்றைய தினம் இரவு எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நான் விடுத்த கோரிக்கை தொடர்பில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலருக்காவது உங்கள் மீது அக்கறை எடுக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்ததையிட்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.
மேலும் அன்புக்குரிய நண்பர்களே, எதிலும் அவசரப்பட வேண்டாம் சற்று பொறுமையாக இருங்கள். நாம் ஆழமாக சிந்தித்து தடம் பதிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளோம். சிலர் உங்கள் மீதும் உங்களின் விலைமதிப்பற்ற தியாகத்தின் மீதும் சேறு பேசுவதற்கு தயாராகவுள்ளனர்.
சில நேரம் நீங்கள் அரசாங்கத்தின் ஆள் என்றும், இரட்டை முகவர்கள் என்றும், அரசாங்கத்திடம் பணம் வேண்டிக்கொண்டு வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர்கள் என்றும்கூட சொல்லக்கூடயவர்கள். இதற்கெல்லாம் கவலைப்படவேண்டாம் , உயரிய சிந்தனையோடு தூய அரசியல் பாதையில் துணிந்து செல்வோம். துணிவைப்பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத்தேவையில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
மேலும், உங்களது முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சரியான பாதையில் நகர்த்திச் செல்ல வேண்டுமென்பது. அதற்கான முயற்சியில் நாம் தற்போது இறங்கியுள்ளோம். முடிந்தவரை முயற்சி செய்வோம் முடியாவிட்டால் அரசியலை கையில் எடுப்போம். ஆயுதம் ஏந்திய உங்களுக்கு அரசியலை கையில் எடுப்பது அவ்வளவு பெரிய கடினமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு முன்னர் எமது அரசியல் கட்டமைப்பை சரியாக கட்டமைக்கும் முயற்சியில் முழுவீச்சோடு செயற்படுங்கள்.
அவ்வாறு செயற்படுகின்ற போது, எமது அரசியல் பயணம் உயரிய நோக்கோடு எமது மக்களை நோக்கியதாக இருக்கின்றது என்பதை எமது மக்கள் நன்கு உணரும் பட்சத்தில் ஒரு இரவில் அனைத்தும் மாற்றியமைக்கப்படும். அவ்வாறு எனில் அடுத்த மாகாண சபை உங்களுடைய கைகளில் கிடைக்கும். அதனை வைத்து இரவு பகலாக எமது மக்களுக்கு சேவை செய்வோம். அதுவரை பொறுமையோடு எம்மை நாம் பலப்படுத்திக் கொள்வோம்.
மேலும், ஏராளமான புனர்வாழ்வளிக்கப்பட்ட எமது போராளிகள் இந்த அரசியல் கட்டமைப்பை உரியமுறையில் கட்டமைத்து முன்நகர்த்துமாறு கோரியுள்ளனர். அவ்வாறு அமையும் பட்சத்தில் கைகோர்ப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இதுமட்டில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
மேலும், அன்புக்குரிய நண்பர்களே, நான் ஒருபோதும் இந்த தேர்தலில் நிக்க வேண்டுமென்று நினைக்கவில்லை ஆனால் உங்களது கோரிக்கை அதுவாக இருக்கின்றது. அரசியலா அல்லது எமது போராளிகளா என்ற ஒரு சூழ்நிலை வருமெனில் அரசியலை துச்சமென மதித்து உங்களுக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன். மேலும் எமது கூட்டமைப்பினர் இனிமேலும் சரியான முடிவெடுக்காமல் பிழையாக செல்வார்கள்ளெனில், காலத்தின் தேவை எதுவோ அது நடக்கும். அதுவரை சற்று பொறுமையாக செல்வோம்.
மேலும், இவர்கள் மீது சேறு பூச நினைப்பவர்களுக்கும், இவர்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு வாக்குகளை சிதறடிப்பதற்காக களமிறக்கப்பட்டவர்கள் என்று சொல்ல நினைப்பவர்களுக்கு நான் ஒரு விடயத்தை கூறிவைக்க விரும்புகிறேன். நீங்கள் தலைவரையும் அவரினால் வளர்க்கப்பட்டவர்களையும் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருப்பவர்களாயின் எமது கூட்டமைப்பில் இவர்களை உள்வாங்கி தேர்தலில் களமிறக்குங்கள் பார்ப்போம். அவ்வாறு செய்தால் சிலர் கூறுகின்ற பொய்யான விடயங்கள் பொய்ப்பித்து விடும் வாக்குகளும் சிதறடிக்கப்படமாட்டாது, கூட்டமைப்பும் பலம்பெறும். இதற்கு அவர்கள் தயார் நீங்கள் தயாரா? இது யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை தற்போதைய யதார்த்தத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கின்றேன். எமது கூட்டமைப்பு பலமாக மாறுவதும் பலவீனமாக அழிந்து போவதும் பொறுப்பு வாய்ந்தவர்களாகிய உங்கள் கைகளில்.
நன்றி
என்றும் அன்புடன் உங்கள் பா.டெனிஸ்.