நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னர் நாட்டின் அரசியல் நிலைமை ஆபத்தானதாக மாறியுள்ளது.இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கடும்போக்கு நிலை பெரும்பான்மை மக்களிடம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
பௌத்த சிங்கள வேட்பாளர்களை மட்டும் தெரிவுசெய்யும்படி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் பௌத்த துறவிகள் கோரிக்கை முன்வைத்து வருவது இதற்கு சிறந்த உதாரணமாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா,குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வன்னி தேர்தல் தொகுதியில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது பெரும்பான்மை சிங்கள மக்கள்வாழும் பிரதேசங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிங்கள பௌத்த வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்குமாறு பௌத்த துறவிகள் கோரிவருவதாக அறிய முடிகின்றது.
பல்லின இனக்குழுமங்கள் வாழும் இலங்கைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேரிதலின் பெறுபேறுகள் பலசெய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளன, தேர்தலுக்கு பின்னராக பத்திரிகைகளில் வெளிவந்த இலங்கையின் வர்ண வரைபடம் தெளிவான செய்தியை சொல்லியுள்ளது.
இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழுகின்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் பொதுஜன பெரமுனவிற்கு குறைந்தளவிலான வாக்குகள் கிடைத்துள்ளது.
அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளது.
இதனால் தான் ஜனாதிபதி தனது பதவியேற்பில் தான் சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று மார்தட்டியுள்ளார்.
பல்லின சமூகங்கள்; வாழும் ஒருநாட்டில் இவ்வாறான நிலைமை இருப்பதானது சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
வன்னித்தேர்தல் தொகுதியை பொறுத்தவரையில் மூவினங்களும் வாழுகின்ற பிரதேசமாகும். எனினும் எண்ணிக்கையில் தமிழ் மக்களே அதிகமாக வாழுகின்றனர். சிங்கள, முஸ்லீம் மக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே காணப்படுகின்றனர்.
எனவே பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களது வாக்குகள் மட்டும் போதாது. எனவே தான் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்து கொடுப்பதற்காக அரச ஆதரவு கட்சிகள், குழுக்கள் தற்போது களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இவர்களால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அதேநேரம் ஆசை வார்த்தைகளை காட்டி தேர்தல் கால சலுகைகளை வழங்கி வாக்குகளை சேகரித்து பெரும்பான்மை கட்சி சார்பில் போட்டியிடும் பெரும்பான்மை சமூகத்தவர்களை வெற்றிபெற மறைமுகமாக உதவுபவர்களாக செயற்படுகின்றார்கள். இது தொடர்பில் தமிழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
அரசின் பங்காளிகளாக கபினட் அந்தஸ்த்து உள்ள அமைச்சர்களாக இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யமுடியாததை மாகாண சபையின் அதிகார வரையறைக்குள் நாங்கள் செய்திருக்கின்றோம்.
ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிலத்தொடர்பில் தொங்குபறியாகவுள்ள நிலையில் எல் வலயமானது நடைமுறைப்படுத்தப்படும் போது வடக்கு மாகாணத்தில் வன்னி மாவட்டங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து துண்டாடப்படும் ஆபத்து உள்ளது.
வடக்கில் 2013ல் மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவது ஓரளவு குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் இவை ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.