–ரிம்சி ஜலீல்-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA) தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு கூட்டம் இன்று (02) நுககஹகெதர நாரம்மலயில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்
முஸ்லிம்களின் ஒற்றுமையினாலேயே குருநாகல் மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியும் கடந்த காலங்களைப் போன்று பிரிந்து செயற்படுவதனால் நமது சமூகத்தின் உரிமைகள் இழக்கப்பட்டு தொடர்ந்தும் அரசியல் அனாதைகளாகவே மாற்றப் படுவோம் .
ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற தேர்தல் வரும்போது நமது சமூகத்தின் வாக்குகள் பிரித்தாளப் படுவதை நாம் அவதானிக்கின்றோம் குறிப்பாக குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுவதை நம்மால் காணமுடிகின்றது.
இந்த தேர்தலில் கொழும்பிலிருந்து வந்த ஆளுனர் ஒருவர் களமிறக்கப் படுவதாக கேள்விப்பட்டேன் அவருக்கு ஆதரவாக அவரது மனைவி ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களாக செல்வதை அவதானிக்க முடிகின்றது மனசாட்சியுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் அவர்களிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி தான் கடந்த இனவாதத் தாக்குதலின் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? ஏன் இப்போது மட்டும் உங்களுக்கு சமூக அக்கறை வந்துவிட்டது என்பதுதான்.
சீசன் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க குருநாகல் மாவட்ட மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல நாம் அவ்வளவு காலம் செய்த அபிவிருத்திகள் சமூக சேவைகள் இத்தனையையும் ஒரே நொடியில் விற்றுவிட இது ஒன்றும் வியாபாரம் அல்ல இது எமது மக்களின் சமூக உரிமை.
எமது வேட்பாளர்கள் இன்று பணத்திற்காக விலை பேசப்படுகிறார்கள் ஒருபோதும் எம்மில் யாரும் விலை போகமாட்டார்கள். எமது தலைமைத்துவமான ரிசாத் பதியுதீன் அவர்களின் நேர்மையான அரசியல் பயணத்துக்கு கிடைத்த பொக்கிஷங்களாக நான் உங்களைப் பார்க்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்கான வியூகங்களை நாம் ஓரிரு வருடங்களாக வகுத்து வருகிறோம் நிச்சயமாக என்னால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்களது ஆதரவும் அல்லாஹ்வின் உதவியும் இருந்தால் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வின் போது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு களமிரங்குவது என்பது தொடர்பான பல்வேறு விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர், ரிதிகம பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் செயலாளருமான அன்பாஸ் அமால்தீன், கல்வி பொறுப்பாளர் ரியாஸ் அஸ்ஹரி, உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் பிரதேசசபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.