Breaking
Fri. Nov 15th, 2024

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் விளம்பரங்களுக்காக சர்வமதத் தலைவர்கள் மற்றும் மத உற்வசங்களைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதம் என்பதால் அதுகுறித்து அதிக அவதானம் செலுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மகாநாயக்க தேரர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கை நாடாளுமன்றம் நேற்றைய தினம் நள்ளிரவில் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான திகதி விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.


பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலும் எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கண்டிக்கு இன்றைய தினம் விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்.


குறிப்பாக, மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலதேரர், அஸ்கிரியப்பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர்,
மல்வத்துப்பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் உள்ளிட்டவர்களை சந்தித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் அவர்களிடம் ஆசிபெற்றார்.


இந்த சந்திப்புக்களின்போது, தேர்தல் சட்டங்களில் உள்ளபடி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தினிடையே, மதத் தலங்கள் மற்றும் மத உற்சவங்களில் தேர்தல் பிரசார செயற்பாடுகளும் விளம்பரங்களும் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள சட்ட வரைவிளக்கங்களை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகாநாயக்க தேரர்களுக்கு விளங்கப்படுத்தினார்.


இப்படியான சட்டமீறல்கள் இடம்பெறாத வகையில் ஆலோசனை செய்து பார்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.


இதனை ஏற்றுக்கொண்ட மகாநாயக்க தேரர்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் வன்முறைச் சம்பவங்கள் வீழ்ச்சியடைந்திருந்தமை மற்றும் இறுக்கமான சட்டதிட்டங்கள் அமுல்செய்யப்பட்டமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு பாராட்டினார்கள்.


இந்த சந்திப்புக்களை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.


‘1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 79ஆம் பிரிவில் பலவந்தமான கருத்துக்கள் என்ற விடயம் காணப்படுகின்றது. இதில், மதத் தலங்களில் அரசியல் கூட்டங்கள் நடத்துவது தடை என்றும், மத உற்வசங்களிலும் கட்சிகளின் விளம்பரங்கள் செய்யவும் தடை எனவும் கூறப்பட்டுள்ளது.


அந்த சந்தர்ப்பங்களைத் தடுப்பது குறித்து சர்வமதத் தலைவர்களைத் தெளிவுபடுத்தி, அந்தந்த தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக பிரதேசங்களிலுள்ள மதத் தலங்கள் பொறுப்புக்களைக் கொண்டவர்களுக்கும் ஆலோசனை வழங்க எதிர்பார்க்கின்றோம்.


இதன் அடிப்படையாக மல்வத்து, அஸ்கிரியப் பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று சந்தித்தோம். இலங்கை 75 சதவீதம் பௌத்த மதம் என்பதோடு நான்கில் மூன்று பகுதியினர் பௌத்த மக்களாவார்கள் என்பதால் முதலாவது பௌத்த பெருந்தலைமைத்துவங்களின் பிரதான மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்று அவர்களுக்கும் தெளிவூட்டினோம். ஏனைய மதத் தலைவர்களையும் குறிப்பாக கர்தினால் பேராயர், இந்து, இஸ்லாமிய மதத் தலைவர் சம்மேளனங்கள் ஆகியோரையும் எதிர்காலத்தில் சந்திக்க உத்தேசித்திருக்கின்றோம்.


மதத் தலங்களில் அரசியல் செய்வது, மத நிகழ்வுகளில் அரசியல் நிகழ்வுகலப்படம் என்பவற்றைத் தடுப்பதற்காக இந்த விடயங்களை செய்ய எதிர்பார்க்கின்றோம்.
அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்கள் உட்பட எந்தவொரு மதத் தலைவர்களையும் சந்திப்பதுவும், தங்களது கொள்கைப் பிரகடனங்களைக் கையளிப்பது என்பன தடையில்லை. ஆனால் அந்த சந்திப்புக்களை அடிப்படையாக வைத்து அரசியல் ஊடக சந்திப்புக்களை நடத்தமுடியாது என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *