மஹர சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டு, முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரத்துக்கு சுமுகமான தீர்வு பெற்றுத் தருவதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உறுதியளித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவை கூட்டத்திலும் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபாவின் தலைமையில் மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் உட்பட மூன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீதியமைச்சில் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர்.
100 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமையான பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளதுடன் அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டு சமய வழிபாடுகள் இடம்பெறுவ தாகவும் குறிப்பிட்டனர். முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசலை மீண்டும் சிறைச்சாலை நிர்வாகத்திடமிருந்து விடுவித்துத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
100 வருடங்களுக்கும் மேல் பழைமையான பள்ளிவாசலை இவ்வாறான நிலைமைக்கு உட்படுத்த முடியாதென்பதை ஏற்றுக்கொண்ட நீதியமைச்சர் இதற்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
‘நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த பள்ளிவாசல் மூடப்பட்டிருக்கவில்லை. மூடியிருந்ததாக காரணம் கூறி சிறைச்சாலை அதிகாரிகள் ஓய்வு அறையாக மாற்றியுள்ளமை சட்டத்திற்கு முரணானதாகும். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் தங்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது அசெளகரியங்களுக்குள்ளாகியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா நீதியமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது