புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்தால், யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவது சிக்கல் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்னர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
புதிய கூட்டணி, ராஜபக்ச எதிர்ப்பு விரிவான அரசியல் கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்து உருவாக்கப்படுமாயின் கட்டாயம் வேறு சின்னத்தை பயன்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள ரணில், அப்படியில்லை என்றால், யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த கூட்டணியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளே இருக்குமாயின் புதிய சின்னத்திற்கான தேவை என்ன எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் இதயம் சின்னத்தை சம்பிக்க ரணவக்கவே பரிந்துரைத்துள்ளதுடன் இந்த சின்னம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
இந்த சின்னத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனினும் இதனை தேர்தல் சின்னமாக பயன்படுத்தினால் சமூகத்தில் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடுமா என்பது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர்.