சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் தாமும் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
மக்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் அரசாங்கமொன்றை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு பங்களிப்புச் செய்வதாக புதிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் மற்றும் தவறான பிரசாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து முற்போக்கான வலுவான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான கூட்டமைப்பின் வெற்றிக்கு அர்ப்பணிப்பு செய்யவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக பயணிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரமளித்துள்ளது.
கூட்டமைப்பின் பொதுச்செயலாளரை நியமிக்கும் பொறுப்பு, பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது, வேட்பு மனு குழுவின் தலைவராக செயற்படும் அதிகாரங்கள் என்பன கூட்டமைப்பின் செயலாளர் என்ற ரீதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட்டுள்ளது.