அம்பலங்கொட, குலரத்ன வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரின் அறிவுறுத்தலுக்கு அமைய 7 மாணவர்கள் இணைந்து இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவனின் தந்தை, தனது மகனுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் பங்குப்பற்றாமை தொடர்பிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை ஆசிரியர்கள் இருவர் வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 மாணவர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தந்தை, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த மாணவன் வேறு ஒரு ஆசிரியருக்கு அறிவித்துள்ளார். இதன்போது மற்றுமொரு ஆசிரியர் மீண்டும் குறித்த மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு 3 அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.