Breaking
Sat. Nov 23rd, 2024

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்து தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


கொத்மலையில் இன்று இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


நாடாளுமன்றத்தை வெகு விரைவில் கலைத்து தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் யோசனை அரச தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது.


இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும். இதன்படி எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்தலாம்.


இதற்கு சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினை இல்லை. ஏனெனில் திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் போது இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வாகன இறக்குமதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
நான் வாகனம் கொள்வனவு செய்யவில்லை. அமைச்சில் இருந்த வாகனத்தையே பாவனைக்கு எடுத்துள்ளேன்.


வாகனம் வாங்குவதற்கு கையொப்பமிடு (சைன்) இல்லையேல் பதவி விலகு ‘ரிசைன்’ என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்தார் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக இருந்த போதே அறிவித்துள்ளார்.


இவ்வாறு தான் எவ்வித திட்டமிடலும் இல்லாமல், கையில் நிதி இல்லாத போதிலும், நாலா புறங்களிலும் கடன்பட்டாவது வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.


ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தனது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காகவே ரணில் இவ்வாறு செய்துள்ளார்.


ஆனால், அன்று இருந்ததை விடவும் இன்று அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. ஏனெனில் அவரின் பிறவி பலன் அப்படி அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *