எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என்ற யோசனையை அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானகரமான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதன் மூலம் பொதுத் தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றி தேர்தலின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய வலுவான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது இவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனாநாயக இடசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தேசிய முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் அந்த கட்சிகள் கைப்பற்றும் ஆசனங்களை இணைத்துக்கொண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அவர்கள் கருகின்றனர்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அதிகமான கோரிக்கைகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதுள்ள நிலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு வேட்பாளர் பட்டியலில் 50 சத வீதத்தை கூட பெற முடியாதிருப்பதாக கூறப்படுகிறது