Breaking
Fri. Nov 22nd, 2024

பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றஞ்சாட்டியுள்ளார்.


அம்பாறை – சம்மாந்துறை, கோரக்கோவில் உதயபுரம் பகுதியில் இன்று நண்பகல் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் அரசியல்வாதிகள் கருணா அம்மான் என்றால் நட்பாகத் தான் இருக்கின்றனர். நான் சண்டைக்கு வருவதாக சாதாரண மக்கள் நினைக்கின்றனர்.

அலிசாகிர் மௌலானா என் உயிர் நண்பர். அரசியல் கொள்கை வேறு நட்பு வேறு. இதுதான் நாகரீக அரசியல்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் குரோத அரசியலை வளர்க்கின்றனர்.

கோடீஸ்வரன் அண்மையில் விட்ட அறிக்கை பாரதூரமான ஒரு அறிக்கை.
பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்றால் அது பாரதூரமான செயற்பாடு.

அது காட்டிக்கொடுக்கும் அரசியல். அதற்கு நான் விடுவேனா? படைத் தளபதியாக இருந்த நான் வெளியில் இருக்கும் போதும் போராளிகளை உள்ளே வைக்க நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போராளிகளை கைது செய்து உள்ளே வைக்க வேண்டுமென்றால் என்னை தானே முதலில் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும்.

நான் துணிந்து வெளியில் நிற்கின்றேன் என்றால் ஏனைய போராளிகளே உள்ளே வைக்க அனுமதிப்பேனா? அது ஒரு காலமும் போராளிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
நாடாளுமன்றத்துக்கு சென்று வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்களை அனுப்புவதால் பொதுமக்களுக்கு என்ன பயன்? அவர்கள் அங்கு சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதால் எமது மக்களுக்கு நன்மை வருமா? நாங்களும் கதைக்கலாம் அதை அடித்து பிடிக்கலாம் இது தகர்த்து பிடிக்கலாம் என்று பேசிக் கொள்ளலாம்.

இதில் எமது மக்களுக்கு என்ன இலாபம் என்று இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது. நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நமக்கு யதார்த்த ரீதியாக பொருந்தக்கூடிய அரசியலை செய்யக்கூடிய தலைமைகள் தான் எமக்கு வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரை பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றை நான் தீர்த்து வருகின்றேன்.

கடந்த காலங்களில் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்கக் கூடிய வாய்ப்புகள் பல கிடைத்தன. ஆனால் அவற்றை தவறவிட்டு விட்டோம். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு சார்பாக எமது பக்கம் தாவி வந்தது கேட்டனர்.

அவர்களின் தகைமை இல்லாமையினால் அந்தப் பதவிகள் கிடைக்கவில்லை அவர்களின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
எமது மக்களுக்கு அபிவிருத்திகள் வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அது அரசியல் சாணக்கியத்தினால் மாத்திரமே முடியும்.

அது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு செய்ய முடியாது. நாம் யுத்தம் வேண்டாம், வன்முறை வேண்டாம் என்று வந்திருக்கின்றோம். எமக்கிருக்கும் ஒரே பலம் அரசியல் பலம்.
நாம் சரியாக திட்டமிட்டு சரியாகச் செயற்டாவிட்டால் அரசியல்வாதிகளை வளர்த்துவிடுவோமே தவிர, தமது பிரச்சினைகள் தீர்க்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது. அவ்வாறான அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள்.

தமிழ் தேசிய உணர்வால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மையாக உணர்வு இருக்கிறதா? இவர்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்று தெரியுமா?
யுத்தத்தின் வடுக்கள் தெரியுமா? யுத்தத்தினால் பிள்ளைகளை இழந்த தாய்களின் வலிகள் தெரியுமா? மாவீரர் குடும்பங்கள் படும் அல்லல்கள் புரியுமா? அவர்களுக்கு தெரியாது.

இப்போது இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது.
தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே புரியாது. இவர்கள் தற்போதும் தங்களை தமிழ் தேசிய உணர்வாளர்கள் போல் சித்தரித்துக் கொண்டு திரிகின்றனர். இவர்களை நாங்கள் விரட்டியடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *