Breaking
Sat. Nov 23rd, 2024

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட முறுகல் நிலையால் அவ் பகுதி சில மணி நேரம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டது.


மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ் சம்பவம்பற்றி தெரிய வருவதாவது,

மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாது மணல் அகழ்வு செய்யப்பட்டு மண் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

இவ் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றன. குறித்த விடயம் தொடர்பில் இப்பகுதி மக்கள் மன்னார் பிரதேச சபை, மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் முறையீடு செய்தும் எந்த வித பலன் அளிக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றுகாலை இவ் பகுதியில் மணல் அகழ்வு செய்ய வேண்டாம் என இப் பகுதி பங்கு தந்தை அருட்பணி அலெக்சாண்டர் பெனோ சில்வா அடிகளாரின் தலைமையில் இப் பகுதி கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் மணல் அகழ்வு செய்வோருக்கும் இடையில் ஓர் கலந்துரையாடல் நடைபெற்று ஒரு சுமூக நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கலந்துரையாடல் இடம்பெற்று சற்று நேரத்தின் பின் பொலிஸ் அதிகாரி ஒருவரின் பாதுகாப்பில் மீண்டும் மணல் அகழ்வு செய்து வெளியில் எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் அப்பகுதி மக்கள் மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை செல்ல அனுமதிக்காது வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பங்குத் தந்தையுடனும் பொது மக்களுடனும் அவ்விடத்தில் நின்ற பொலிஸ் அதிகாரி முரண்பட்டதால் நிலைமை மோசமாகியது.

இதனையடுத்து சம்பவத்தை அறிந்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிறிஸாந்தன் மற்றும் அருட்பணியாளர்கள் கிறிஸ்ரியன் வாஸ், ஆரோக்கியநாதன் அடிகளார் ஆகியோர் இவ் இடத்துக்கு விரைந்து வந்திருந்தனர்.

அருட்பணியாளருடன் முறுகல் நிலையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி அருட்பணியாளரிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அங்கு சுமூக நிலை ஏற்பட்டது.
இது விடயமாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிறிஸாந்தன் மற்றும் அருட்பணியாளர்கள் கிறிஸ்ரியன் வாஸ், ஆரோக்கியநாதன் அடிகளார் ஆகியோருடன் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஐ.றிச்சட் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இவ் கலந்துரையாடலில் பொது மக்களும் அருட்பணியாளர்களும் கருத்து தெரிவிக்கையில்,

இங்கு மீன் வளர்ப்புக்கென அனுமதி பெற்றிருப்பதாக தெரிவித்து மணல் அகழ்வு செய்யப்படுகின்றது. ஆனால் மீன் வளர்ப்புக்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை.
இக்கிராமத்தில் 500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். மக்கள் குடியிருப்புக்கு அருகாமையிலே இவ் மணல் அகழ்வு இடம்பெறுவதுடன் இப் பகுதியில் மணல் அகழ்வு செய்யப்பட்ட கிடங்குகளுக்குள் இரு சிறுவர்கள் விழுந்து அண்மையில் இறந்த சம்பவமும் உண்டு.

இவ் சம்பவம் தொடர்பாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் பிரதேச சபைக்கும் முறையீடு செய்துள்ளோம்.
ஆனால் இவர்கள் எவரும் இவ் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லையென தெரிவிக்கின்றபோதும் இதை நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று பொலிசாரின் உதவியுடன் இவ் மணல் அகழ்வு இடம்பெறுவதையே நாங்கள் கண்டித்து இவ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தனர்.

இதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிறிஸாந்தன் தெரிவிக்கையில், மணல் அகழ்வில் ஈடுபடுவோர் இதற்கான அனுமதிப்பத்திரத்தை எமக்கு காண்பித்துள்ளார்.

இதை தடைசெய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை. இருந்தும் அமைதிக்கு பங்கம் ஏற்படுமாக இருந்தால் அதை தடுத்து நிறுத்துவது எமக்குரிய கடமையாகும்.

ஆகவே இது விடயமாக பங்கு தந்தைகளுடன் உங்கள் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுடன் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடுவது நலமாகும். அவசியம் ஏற்படுமாகில் நானும் இதில் கலந்துகொள்ள ஆயத்தமாக இருக்கின்றேன் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *