மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து போட்டியிட்டால் ஒருவர் வெற்றியடையக்கூடிய சாத்தியம் உள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆதரவாளர்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறுக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த வாக்குகள் சுமார் 38 ஆயிரம். அதேவேளை தனித்து போட்டியிட்ட ஹிஸ்புல்லா பெற்ற மொத்த வாக்குகள் 12 ஆயிரம்.
இவ்வாறு பார்க்கும் போது ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.க கூட்டுக்கெதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வாக்குகள் சுமார் ஐம்பதினாயிரம்.
தற்போது பெரமுன கட்சியே ஆளும் கட்சியாக இருப்பதாலும் இன்னும் 10 வருடங்களுக்கு அக்கட்சியை அசைக்க முடியாது என்பதை மக்கள் புரிந்திருப்பதாலும் மக்களின் வாக்குகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்த நிலையில் பெரமுன கட்சி சில வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்தால் மிக அதிகப்படியான வாக்குகளை பெற முடியும்.
முதலில் முஸ்லிம் மக்களுக்கெதிராக இனவாதம் பேசி வாக்குப்பெற முடியாது என்ற உண்மையை கருணாவுக்கும், வியாழேந்திரனுக்கும் பகிரங்கமாக உணர்த்த வேண்டும். இந்த இரு இனங்களுக்கிடையிலான இனவாதத்தை தமிழ் மக்களும் முஸ்லிம்களும் விரும்பவில்லை என்பதை கடந்த தேர்தல் உணர்த்துகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானுக்கு கணிசமான வாக்குகள் உள்ளதால் பிள்ளையானும், ஹிஸ்புல்லாஹ்வும் இணைந்து பெரமுன கட்சியில் போட்டியிட்டால் இருவரும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளையான் இனவாதமற்ற ஒருவர் என்பதை அனைவரும் அறிவர். பிள்ளையானை விடுவிப்பதும் கள நிலைவரத்தை சாதகமாக்கும்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக உள்ள வியாழேந்திரன் சகல மக்களுக்கும் சேவை செய்து அரசுக்கு ஆதரவாக தமிழ், முஸ்லிம்களை திருப்ப வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு வெறுப்புள்ள இன்றைய நிலையை எப்படி அரச சேவையின் மூலம் அரசுக்கு ஆதரவாக மாற்றலாம் என்பதை ஆலோசிக்க வேண்டும்.
முன்னைய காலத்தை விட தமிழ் மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பெரமுன கட்சியின் பக்கம் திரும்பி பார்ப்பதை காண முடிகிறது. இவ்வாறு செயல்பட்டால் சில வேளை பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தை வெல்லக்கூட வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.