வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி வழங்கவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி கொழும்பு பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
வட்டிக்குப் பணம் கொடுப்போரை விளம்பரப்படுத்தும் விதத்தில் டிஜிட்டல் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் சில மோசடியென முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேவேளை பொதுமக்கள் வட்டிக்குப் பணம் கொடுப்போரை துன்புறுத்துவதாக ஏனைய முறைப்பாடுகள் காணப்படுகின்றன.
அத்துடன் வாடிக்கையாளர் பற்றிய தகவலை நம்பிக்கையாகவும், இரகசியமான முறையிலும் பேணுவது மீறப்படுவதுடன், அதிக வட்டியென்ற முறைப்பாடுகளும் காணப்படுவதாக தெரியவருகிறது.
தற்போதைய சட்டக்கட்டமைப்பின் பிரகாரம் வட்டிக்கு கடன் கொடுப்போர் அனுமதிப்பத்திரம் மற்றும் ஒழுங்கமைப்புக்குள் வரவில்லை. இவர்கள் வைப்புகளை ஏற்கும் வரை இதற்குள் வரமாட்டார்கள் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனவே வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரைப் பாதுகாக்க அனுமதி வழங்கவும், ஒழுப்படுத்தவும் சட்டமொன்றை வரைய நிதியமைச்சுடன் இணைந்து மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுகிறது. அது விரைவில் சட்டமாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை வட்டிக்கு கடன் கொடுப்போர் என்ற போர்வையில் மோசடியில் சிக்குவதை தவிர்க்குமாறு பொது மக்களை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
கடன்பெற முன் உரிய அவதானம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறியப்படாத நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்கள் வழங்கல், வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்திடல், நிபந்தனை விதிமுறை தெளிவற்ற போது கையெழுத்திடல், பத்திரம் நிரப்பும் போது மூன்றாம் தரப்புக்கு இடமளித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.