Breaking
Sun. Nov 24th, 2024

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் கற்றாளை உறிஞ்சி கொள்வனவின் போது 166,750 ரூபாய் மேலதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வு திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

வடமாகாண விவசாய பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் காற்றாளை உறிஞ்சி கன்று ஒன்றின் நியம விலை 35 ரூபாய் எனவும், கொள்வனவு செய்யவதற்கான இடமும் தெரிவிக்கப்பட்டிருந்தும் வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவின் காலப்பகுதியில் இதனை பெறுகைக்குழு கவனத்தில் கொள்ளாது வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் நாற்று மேடை விற்பனை நிலையத்தில் 150 ரூபாய் வீதம் 1200இற்கு மேற்பட்ட கற்றாளை உறிஞ்சிகளை கொள்வனவு செய்து 166,750 ரூபாய் அரச நிதியினை வீண் விரயம் செய்துள்ளமை கணக்காய்வு அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்ட 1250 காற்றாளை உறிஞ்சி கன்றுகளும் பைகளில் இடப்படாமலேயே கொள்வனவு செய்து விவசாய பயிற்சி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 2019.01.23ஆம் திகதி மாகாண கணக்காய்வின் போது 263 காற்றாளை உறிஞ்சி கன்று மாத்திரமே காணப்பட்டதுடன் 987 காற்றாளை உறிஞ்சி கன்றுகள் அழிவடைந்து காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவினால் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு இவ்வாறு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட காற்றாளை உறிஞ்சி கன்றுகளில் 80 வீதத்திற்கு அதிகமானவை அழிவடைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக விவசாயிகளின் வயல்களை பார்வையிட்ட மாகாண கணக்காய்வு குழு அறிக்கையிட்டுள்ளது.

காற்றாளை உறிஞ்சி கன்று அழிவுகள் தொடர்பாக மாகாண கணக்காய்வு குழு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிகப்பட்டுள்ளதாவது,
பாவற்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 100 வீதம், செட்டிக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 81 வீதம், நெடுங்கேனி விவசாய போதனாசிரியர் பிரிவில் 70 வீதம், கோவிற்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 60 வீதம் போன்று காற்றாளை உறிஞ்சி கன்றுகள் அழிவினை சந்தித்துள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக விவசாயிகளிடையே கணக்காய்வு குழு நடத்திய விசாரணையின் போது, வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட காற்றாளை உறிஞ்சி கன்றுகள் அழுகிய நிலையிலும் பழுப்பு நிறத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கணக்காய்வு குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.

பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபாணுவின் காலப்பகுதியில் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் மாகாண நிதிச்சுற்று நிரூபம் PF/06/2015 (1) இல் கூறப்பட்ட எவற்றையும் பின்பற்றுவது இல்லை எனவும் அத்துடன் சந்தை விலைகள், மற்றைய நியம விலைகளை விட கொள்வனவு விலை அதிகரித்து இருப்பதினால் பெறுகை குழுவோ, தொழிநுட்ப குழுவோ கவனத்தில் எடுக்காமையினால் அரச நிதி மேலதிகமாக வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கணக்காய்வு விசாரணைகளையின் போது தெரியவந்துள்ளதாக மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ச.சுரேஜினி தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறு அரச நிதி வீணடிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளுக்கு தரமான நாற்றுக்களை வழங்காததினால் விவசாயிகளுக்கான தாவர பரமாரிப்பு செலவுகள் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயிகளுக்கு தொழிநுட்ப அறிவூட்டலை வழங்க வேண்டிய விவசாய திணைக்களம் தரமான நாற்றுக்களை குறைந்த விலையில் வழங்க முடியாமையும் வழங்கிய நாற்றினை பாதுகாப்பதற்கான ஆலோசனையினை வழங்க முடியாமல் தொழிநுட்பம் சார்பான திணைக்களம் வவுனியாவில் இயங்குவது விவசாயிகளின் விசனத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *