ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும்வரை அதுகுறித்த பிரசாரங்களை செய்ய வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இந்த உத்தரவை விடுத்தார்.
வேட்பாளர் விவகாரத்தில் கட்சியின் ஐக்கியத்தைப் பாதுகாத்து அனைவரும் ஒன்றிணைந்தே முடிவெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், மத்திய செயற்குழு மூலமாக இந்த முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் 6ம் திகதி மீண்டும் கூடி இந்த விவகாரம் பற்றி பேசி முடிவுக்கு வருவோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, வஜித அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, அக்கிலவிராஜ் காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகிய சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.