சுஐப் எம். காசிம்
சகோதர சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும் வடக்கு,கிழக்குச் சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தியே உள்ளது.
இவ்வாறு முஸ்லிம் தலைமைகளை வழிநடத்த ஒரு புறச்சக்தி இல்லாதிருந்த நிலையை, ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னால் எழுந்த நிலவரங்கள் இல்லாமலாக்கின. முஸ்லிம் சமூகத்தின் மீது வீறிட்டெழுந்த பேரினவாதப் பாய்ச்சலுக்குள் நிரபராதிச் சமூகம் பலிக்கடாக்களாவதைத் தடுக்க, கூட்டாக அமைச்சுக்களைத் துறந்த வரலாறும் பாராளுமன்றப் பதவிகளைத் துறந்து அஹிம்சைப் போராட்டம் நடத்திய தமிழர்களின் வரலாறும் போராட்ட குணாம்சத்தின் வெவ்வேறு வடிவங்கள். எமக்கான உரிமைகளைப் போராடியே, பெற வேண்டிய சமூகங்களாகவே நாம் ஆக்கப்பட்டுள்ளோம். பொதுவான போராட்டத்தில் ஒன்றிக்க வேண்டிய எம்மை, அகமுரண்பாடுகள் அந்நியப்படுத்துகிறதே. இந்தக் கவலைகள் நிதான போக்குத் தமிழ், முஸ்லிம் தலைமைகளிடமே இருக்கின்றன. அமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்ற முஸ்லிம் எம்பிக்கள், வட-கிழக்குச் சமூகங்களுக் கிடையில் சிலர் ஏற்படுத்தவிருந்த மிகப்பெரிய இடைவௌியை நெருக்கமாக்கியுள்ளனர்.கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,எம்மைப் பேரினவாதம் ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்தியதுடன் அண்ணன், தம்பி பிரச்சினைக்குள் அயல்வீட்டான் வரக்கூடாது என்ற அரசியல் சித்தாந்தத்தையே கற்றுத்தந்தது. கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமும் இந்தக் கோணத்தில் நோக்கப்படுகிறதோ தெரியாது.
பிரதேச செயலகத்தின் தரமுயர்வு, சுய ஆள்கைக்கான அடையாளம்தான். இந்த அடையாளத்தை அடையும் முயற்சிகள், சிறுபான்மைச் சமூகங்களின் பொது அடையாளம், சித்தாந்தத்தை சிதைக்கக் கூடாது. எமது அகமுரண்பாடுகள் தமிழ்மொழி மண்ணில் அந்நியரை ராசாவாக்கக் கூடாதென்பதே எமக்குத்தேவை. அமைச்சர் ரிஷாட்பதியுதீன் மீதான அத்தனை குற்றங்களும் பொய்யாக்கப்பட்டு, கோரிக்கைகளில் பல நிறைவேறி, நிரபராதிகளும் விடுதலையான பின்னர், இன்னும் எதற்கு எதிர்ப்பு அரசியல்?
அறுபது வருடங்களாக அலைக்கழிக்கப்பட்ட, தமிழர் தாயகத்துக்கான அரசியல் தீர்வுகள், 2001 ஒக்டோபர் 21க்குப் பின்னரே மெதுமெதுவாகத் தென்படத் தொடங்கின.தமிழ் கட்சிகளை, வலுக்கட்டாயத்தில் ஒன்றிணைத்த புலிகளின் இராஜதந்திரம் தமிழர்களின் வசந்த வாசலைத் திறந்தது. இந்த நாட்களில் தமிழ் சகோதரர்களின் நம்பிக்கைகள் நட்சத்திரமாக ஔிர்ந்தமை என்னால் உணரப்பட்டது. எனது பிறப்பு முதல் அத்தனையும் வடக்குடன் தொடர்புற்றதால் தமிழர் தரப்பு அபிலாஷைகள் அத்தனையும் எனக்குள் விரவியிருந்தன. பிரபாகரன் தலைமை யேற்கா விடினும் அவரது ஆலோசனையில் பிறந்த கட்சி என்பதால் சிலர் இந்தக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன செய்வது? ”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற எதிர்பார்ப் புடன் இந்தத் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்பதைத் தவிர மிதவாதப்போக்கு தமிழர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
இந்தக் கூட்டமைப்பை உருவாக்கிய பிரபாகரன் பலவற்றை எதிர்பார்த்திருந்தார். கடந்தகால ஜனநாயக விரோத செயற்பாடுகளை மறைத்து ஜனநாயக விம்பத்தை ஏற்படுத்தல், தமிழர்களின் அரசியல் பலம், ஆயுத பலத்தை ஒருங்கே இணைத்து ஒரு பக்கம் பேரம் பேசும் சக்தியையும் மற்றொரு புறம் இராணுவ பலத்தையும் நிரூபித்தல். இதுவே தனி இராச்சியத்துக்கான பிரபாகரனின் சித்தாந்தங்களாக இருந்தவை. வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் ஒரு பாரிய கட்டமைப்பூடாக, அரசுக்கு நிகரான இயந்திரத்தை இயக்கும் ஆற்றல் உள்ளதாகக் காட்டி விட்டால் தமிழர்களின் அபிலாஷைகளை சர்வதேசமும் அங்கீகரிக்கலாம். இந்தப்பாதையே ஆகக் குறைந்தது சமஷ்டித் தீர்வுக்காவது வழிகாட்டும். இந்தப் புரட்சிப் பாதைகளில் இடைஞ்சல் ஏற்படாதிருந்தால் இன்று சமஷ்டிக் கோரிக்கைகள் தமிழர்களின் வசந்த வாசலைத் தட்டியுமிருக்கும்.சிங்கள இராணுவத்தின் போரிடும் ஆற்றலும் மஹிந்தவின் ஆளுமையும் தமிழர் தரப்பு இராணுவப்பலத்தை சிதறடித்ததால், சமஷ்டிப் பாதையில் சிறு தடங்கலையும் ஏற்படுத்திற்று. இதைத் தகர்த்தெறிய அரசியல் பலம் நிலைக்க வேண்டும். துரதிஷ்டமாக இந்தப்பலமும் புலிகள் இல்லாத நிலையில் நிலைக்குமா? என்ற ஐயமே தமிழர் தரப்பு அரசியல் களத்தில் வேரோடி வருகின்றன.
அறுபது வருட அபிலாஷைகளுக்கு குறுக்காக முஸ்லிம்களும் களமிறங்கியதான மனக்கீறல்களும் தமிழ் சகோதரர்களுக்கு உள்ளதுதான்.இப்போதைக்கு இதுவல்ல விவாதம். தமிழர் தரப்பு அதிகார மோகங்கள், மோதல்கள், குடுமிச் சண்டைகள், 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழரின் கூட்டுப் பலத்தை சிதைக்கத்தலைப் பட்டுள்ளதே? எதிர்கொள்ள நேர்ந்த அழிவுகளுக்கு எதையாவது பெறுவோம் என்ற எதிர்பார்ப்புடனிருந்த, தமிழர்களுக்கு இது மிகப் பெரிய வேதனையாகவன்றி வேறெதுவாகவும் இருக்காது.
எப்படி முயன்றாலும் வட மாகாண சபையைக் கைப்பற்ற முடியாது என்பதையறிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு அடையாளத்துக்காகவே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை களமிறக்கினார்.சகலரும் எதிர்பார்த்தது போல, வடமாகாண சபையை தமிழர்களின் கூட்டுப்பலமே கைப்பற்றியது.
இதுவல்ல இக்கட்டுரையின் கரு. இந்தத் தமிழ் தேசியத்தின் வெற்றிக்கு தனி ஒரு மனிதரின் திறமை அளவுகோலாகப் பயன்படுத்தப்படுவது ஏன்? மட்டுமல்ல இந்தத் தவறான அளவு கோலே தமிழர்களின் கூட்டுப்பலத்தை தகர்ப்பதற்கும் தயாராக்கப்படுகிறதே? இந்த இடத்திலிருந்தே தமிழ் தலைமைகள் அவசரமாகச் செயற்பட வேண்டும். உண்மையில் தமிழ் தேசியத்தின் மொத்த எழுச்சி, புலிகளின் ஆயுதப் பலம் வீழ்த்தப் பட்டதற்கான பழிவாங்கலாகவே பார்க்கப்பட வேண்டும்.ஒட்டுமொத்த எழுச்சியை தனிமனிதரின் ஆளுமைக்குள் கணக்கிட முடியாது.
இந்தத் தப்புக்கணக்கின் நியதிகளிலிருந்து தயாராகும் தமிழர்களுக்கான மாற்றுத் தலைமை, சிங்கள கடும்போக்கிற்கு மறைமுகமாக உதவுமா? அல்லது பிரபாகரன் உருவாக்கிய தமிழ் கூட்டுப் பலத்தை சிதைக்குமா? இந்தப் பதில்களை தேர்தல் களங்களிடமே விட்டு விடுவோம்.
சகோதர மொழிச் சமூகத்தின் தவறுகளை பவ்வியமாக எடுத்துக்கூறி நூதன நடைமுறைகளூடாக வட, கிழக்கு, மொழிச் சமூகங்களை ஒன்றிணைப்பதே தேரவாதம், பௌத்த கடும்போக்குவாதங்களுக்கு சிறுபான்மையினர் வழங்கும் பதிலடியாகும். இந்நிலையில் புதிய தலைமையாக உருவெடுக்க எத்தனிக்கும், தலைமையொன்று முஸ்லிம் விரோதப்போக்கை கையாள்வது கவலையே.
தமிழ் தேசியத்தின் முகவரிக்காக, வடக்கு கிழக்கின் பூர்வீகத்திற்கு வௌியிலிருந்து வேட்பாளரைத் தெரிவு செய்த, தவறின் விளைவுகள் தனித் தமிழ் பலத்தை மட்டுமல்ல, சிறுபான்மைக் கூட்டுப் பலத்தையும் விட்டபாடில்லை. முரண்பாடுகள் மலையளவு இருந்த போதிலும் வடக்கு, கிழக்கு சமூகங்கள் மனந்திறந்து பேசுவதுதான் பொது எதிரியைப் பலவீனப்படுத்தும். இந்தப்பொது உணர்வை எவராலும் பிரிக்க முடியாதுள்ளதே உண்மை. ஆனால் புதிய தமிழ் தலைமையொன்று செவியேறல் கதைகளையே நாக்கூசாமல் கூறி, பின்னர் நழுவிச் செல்வது பொதுச் சமூகங்களை வழி நடத்துவதிலுள்ள முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. கிழக்கில் முந்நூறு தமிழ் கிராமங்கள் பலவந்தமாக முஸ்லிம் ஊர்களுக்குள் உள்ளீர்க் கப்பட்டதாக, இத்தலைமை எப்படிக் கூற முடியும்?
செவியேறல் கதைகளை இப்படி அப்பட்டமாகக் கூறுதாக இருந்தால் திட்டமிட்டுக் கூறியிருக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் தெரியாமல் புலம்பியிருக்க வேண்டும்.