சுஐப்.எம்.காசிம்.
ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துமாறு சகல கட்சிகளும் கோருவதன் யதார்த்தம் என்ன? நாட்டின் அதியுச்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டால் ஏனைய அதிகாரங்களை இலகுவாக வென்றுவிடலாம் என்பதே இக் கட்சிக ளின் எதிர்பார்ப்பு.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.
ஆனால் பாராளுமன்றத்தைக் கலைத்து,தனக்கு விரும்பிய அரசாங்கத்தை உருவாக்குவதில் தோற்றுப்போனது ஜனாதிபதி சந்திரிக்கா மட்டுமே.அதே போன்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்து தோற்கடிக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்,மாகாண சபைத் தேர்தல்களை இலகுவாக வெல்ல வேண்டுமானால் ஒரே கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியும் அதே கட்சி அரசாங்கமும் தெரிவு செய்யப்படுவதே சிறந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு முன்னரே,ரணில் தலைமையிலான அரசாங்கம் சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரத்தை இரண்டு வருடங்கள் ஒதுக்கி வைத்திருந்தது. இந்தக் கொடுமைகள், அவமானங்களைத் தாங்க முடியாததாலே இரண்டு வருடங்களில் ரணிலின் அரசு கலைக்கப்பட்டது.இப்போது 19 ஆவது திருத்தமும் வந்துள்ளதால் எதற்கு இந்த வம்பு. உள்ள அதிகாரங்களை ஒரே கட்சியிலே பெற்று விடுவோம். இந்தச் சிந்தனைகளே சகல கட்சிகளையும் ஜனாதிபதித் தேர்தலில் விருப்புற வைத்துள்ளது. வெறுமனே விரும்பி என்ன பலன்? தேர்தலையும் வென்றாக வேண்டுமே!.இதுவே வேட்பாளர்களைத் தெரிவதில் முக்கிய இரண்டு கட்சிகளையும் தடுமாறவைத்துள்ளன.இம்முறை தேர்தலில் தோற்கடிக்கப்படும் கட்சி இன்னும் இருபது வருடங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பெறமுடியாது.இது சகலருக்கும் தெரிந்த எளிய கணிப்பீடாகும்.”தருணம் தப்பினால் தலை” என்கின்ற சூழல்போன்றே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.”தலையோடு வந்தது தலைப்பாகையுடன் போன கதையாக”,எதிர் வரும்தேர்தலைக் கருதமுடியாது. இந்த அச்சமே சகல அரசியல்வாதிகளையும் பதட்டப்படுத்துகின்றது. ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவது,பகிரங்கமாக அறிவிப்பதில் இக்கட்சிகளைத் தடுமாற வைப்பதும் இந்த அச்சங்கள்தான்.ஶ்ரீலங்கா பொதுஜன வைப் பொறுத்த வரை வேட்பாளர் ஒரு விடயமில்லை.மஹிந்தவின் ஆளுமைக்குள் உட் கட்சிப் பூசல்கள் பூனைபோல் சுருண்டு விடும். ஒருவாறு விருப்பமின்றி சிலர் வௌியேறினாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நகர்வுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஐக்கிய தேசிய கட்சியின் நிலைமையே சற்றுப் பரிதாபமாகி வருகிறது.ரணிலா,?சஜித்தா?கருவா?பொன்சேகாவா? சம்பிக்கவா?என்ற எதிர்வு கூறல்கள் உண்மையில் ரணிலையே அதிகளவு கவலைப்படுத்தும். தன்னை ஏகமனதாக அங்கீகரித்து,வேட்பாளராக்க வேண்டுமென்ற ஆசையை வௌிப்படையாகச் சொல்லுமளவுக்கும் அவருடைய நிலைமையும் இல்லை. ஏற்கனவே சில சிங்கள ஊடகங்கள்,திட்டமிட்டு ஜனாதிபதி வேட்பாளர் ஸ்தானத்திலிருந்து,தன்னைத்தூரப் படுத்தியுள்ளதாகவே ரணிலும் உணர்கிறார். ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான சில ஊடகங்கள் ஶ்ரீலங்காப் பொதுஜன பெரமுனவுக்கு செய்த கைங்கர்யமும் இதுதான்.இதற்காக,ரணில் போட்டியிட்டால் ராஜபக்ஷ தரப்பு தோல்வியுறும் என்பதுமல்ல விடயம்.”எதிரி குழம்பிவிட்டால் கொண்டாட்டம்தானே!.ஆனால் ராஜபக்ஷ தரப்பும் மிக இலகுவாக வெல்ல முடியாது.தமிழர் தரப்பு, முஸ்லிம் தரப்பு ஆதரவுகளைப் பெறுவதில் இது வரைக்கும் இக்கட்சியின் தலைமை சரியான நகர்வுகளை முன்னெடுக்கவுமில்லை. விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,அத்துரலிய, உள்ளிட்ட ஏன்?,கட்சியின் நாயகர் ராஜபக்ஷவின் கருத்துக்களும் பௌத்த மேலாண்மைவாதத்துக்கு உரமூட்டுவதையே காட்டுகின்றன.பௌத்த நாட்டுக்குப் பொருத்தமான பொதுச்சட்டத்தின் கீழே, இங்குள்ள ஏனைய இனங்களும் ஆளப்பட வேண்டும்.இதுதான் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்.சிறுபான்மைச் சமூகங்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிலிருந்து விலகிச் சென்ற ஓரிரு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு கிடைக்கலாம். இச் சமூகங்களின் எத்தனை வீதத்தை இவை ராஜபக்ஷக்களுக்காகப் பெற்றுக் கொடுக்கப் போகின்றன.? இதுதான் கேள்வி.
களத்தில் குதிக்கவுள்ள சகல கட்சிகளும் என்ன விலை கொடுத்தும் ஜனாதிபதியைப் பெறவே களமாடும்.பெறப்போகும் ஜனாதிபதியும் பொருத்தமானவராக இருக்க வேண்டுமே!. இதற்காகத்தான்,ரணிலும் மௌனம் காக்கின்றார் .
முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,இன்னும் மலையகக் கட்சிகளைத் தனது அபிமானத்துக்குள், கொண்டு வந்து,ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவைக் கட்டி வைப்பதற்கான மௌனம்தான் ரணிலுடையது.முன்னாள் ஜனாதிபதியின் மகனாக சஜித் இருந்தாலும் சிறுபான்மைச் சமூகங்கள், அச் சமூகங்களின் தலைமைகளுடன் நெருங்கிய உறவுமில்லை. அச்சமூகங்களின் அபிலாஷைகளில் அவருக்கு தௌிவுள்ளதாகவும் புரியவில்லை.ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மைத் தலைவர்கள் இவர் குறித்து மௌனம் காப்பதும் இதற்காகத்தான். இவர்களின் மௌனம் சில வேளைகளில் ரணிலுக்கு வாய்ப்பாக அமையப் போகிறதோ தெரியாது. தமிழரும் வேண்டும்,முஸ்லிம்களும் தேவை என்ற ரணிலின் இக்கட்டான நிலைமைகள் சிறுபான்மைக் கட்சிகளுக்கு வாய்ப்பாகி வருகின்றன.
வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லை, தோப்பூர் உப பிரதேசத்தை தரமுயர்த்தல் , கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரங்கள், அப்பாவி முஸ்லிம் கைதிகளின் விடுதலை போன்றவற்றில் கைதிகள்,காணி விவகாரங்கள் மாத்திரமே ரணிலிடம் இல்லை.இதனால்தான் தமிழர்களின் காணி விடுவிப்பும் முஸ்லிம் கைதிகள் விடயங்களும் ஊமை கண்ட கனவுகளாக உள்ளன.நிர்வாக எல்லைகளைத் தீர்க்கப்போனால் ஒரு பக்கம் தமிழரும்,மறுபக்கம் முஸ்லிமும் தூரமாகின்றனர்.இந்த இறுதிக் கட்டத்தில் எம்மவர்கள் முரண்படுவதா? எமது முரண்பாடுகள் ராஜபக்ஷக்களைப் பலப்படுத்துமா?இதுதான் நிதான போக்குள்ள சிறுபான்மைத் தலைமைகள் சிந்திக்கும் விடயம்.இவற்றைக் குழப்பி ராஜபக்ஷக்களைப் பலப்படுத்த முனையும் கூட்டத்தினரே,தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கான புதிய தலைமைத்துவமாக தங்களைச் சுய அறிமுகம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.இவர்களின் புறப்பாடுகளால் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மைத் தலைமைகளின் இருப்புக்கள் சிதைக்கப்படுமா? என்னவானாலும் இவர்களின் ஆதரவுகள் ரணிலை வேட்பாளராக்குமா?அல்லது சிதைவுகள் ராஜபக்ஷக்கள் எதிர்பார்ப்பது போன்று அவர்களுக்கு வாய்ப்பாகுமா?கோட்டாபயவை களமிறக்கி சிறுபான்மையினரின் அமோக வாக்குகளைப் பெறமுடியாது என்பதும்,அமெரிக்கப் பிரஜையாகவுள்ளதால் அவர் எதிர்கொள்ள நேரும் நெருக்கடிகளும் கட்சியின் இமேஜைப் பாதிக்கலாம். எனவே வேறு எவரையாவது நிறுத்தி சிறுபான்மையைக் கவரலாம் என்றால்,தெற்கில் நிலவரமும் தலைகீழாகலாம்.ஆனால் தெற்கை மட்டும் திருப்திப்படுத்துபவர்,வடக்கு கிழக்கு விடயத்தைக் கோட்டைவிட்டுவிடுவார் என்ற பொதுவான சமன்பாடுகளுக்கு மத்தியிலே சிறுபான்மையினர் வாக்களிக்க வேண்டியுள்ளது.