Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார், புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்து சாம்பளாகியுள்ளதுடன் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான புத்தகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த மொத்த விற்பனை நிலையம் வழமை போல் நேற்று இரவு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் மூடப்பட்டிருந்த குறித்த விற்பனை நிலையத்தினுள் இருந்து தீ மற்றும் புகைவெளி வருவதை அவதானித்த மக்கள் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும், மன்னார் நகர சபைக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களுமே எரிந்து சாம்பளாகி உள்ளதுடன் தீ பரவல் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பரவாத வகையில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இத் தீ பரவலுக்கான காரணம் மின் ஒழுக்கா? அல்லது திட்டமிட்ட சதியாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்துக்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்திற்கு அவசரமாக தீ அணைப்பு வாகனம் தேவை என்பதனை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததோடு, அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

இந்த நிலையில் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக மன்னார் மாவட்டத்திற்கு தீ அணைப்பு வாகனம் வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஆனால், மாதங்கள் பல கடந்த போதும் பிரதமரின் உறுதி மொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும், தீ அணைப்பு வாகனம் இருந்திருந்தால் குறித்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விற்பனை நிலையத்தில் இருந்த பொருட்களை பாதுகாத்திருக்க முடியும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *