(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)
முஸ்லிம்களின் தனியார் சட்டத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பேரினவாதம் நீண்ட காலமாக குரல் கொடுப்பதுடன், அதன் செயல்பாடுகளை திட்டமிட்டு வருகின்றது.
இவ்வாறு பேரினவாதிகளின் திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை பதினெட்டாக நிர்ணயிப்பதற்கு எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பௌசியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்துள்ளார்கள்.
பேரினவாதிகளினால் நேரடியாக செய்ய முற்படும்போது எழுகின்ற எதிர்ப்பினை சமாளிக்கும் பொருட்டு, எமது கைகளைக் கொண்டே எங்களது கண்களை குத்துகின்ற நிலைதான் எமது உறுப்பினர்களின் இந்த தீர்மானமாகும்.
இந்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் பெற்றோர்கள் சிறுவயதில் பெண்களுக்கு பலாத்காரமாக திருமணம் செய்துவைத்தால் இந்த சட்டம் சிறுமிகளின் பாதுகாப்புக்கும், அவர்களின் கல்வியை கட்டாயப்படுத்துவதற்கும் வயதெல்லை அவசியம் என்ற ரீதியில் இதனை அங்கீகரிக்கலாம்.
பாகிஸ்தான், வங்காலதேஸ், மொரோக்கோ போன்ற நாடுகளின் சில கிராமப்பகுதிகளில் பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை கல்வி கற்பிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை.
அத்துடன் பெண்களின் விருப்பமின்றி இளவயதில் பலாத்காரமாக திருமணம் செய்துவைக்கின்ற நடைமுறை அங்கு அதிகமாக காணப்படுகின்றது. அதனால் குறிப்பிட்ட இந்நாடுகளில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே திருமண வயதெல்லை பதினெட்டாக நிர்ணயித்துளார்கள்.
ஆனால் எமது நாட்டு சூழ்நிலை அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். கல்வியை பூர்த்தி செய்தபின்புதான் திருமணம் செய்து வைக்கப்படுகின்றது. இங்கே பலாத்காரமாக பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதில்லை. அதனால் திருமண வயதெல்லையை நிர்ணயிக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை.
இவ்வாறு திடீரென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வயதெல்லையை தீர்மானிப்பதற்கான தேவை என்ன ? அவ்வாறாயின் இதற்குரிய நியாயத்தினை மக்களுக்கு ஏன் எத்திவைக்கவில்லை ?
ஒரு பெண் பருவம் அடைகின்றபோது அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இயற்கையாக தனது கட்டளைப்படி இறைவன் காண்பிக்கிறான். அப்படியிருக்கும்போது இறைவனுக்கு சவால்விடுவது போன்றுதான் இந்த தீர்மானம் அமைகின்றது.
மேலே கூறப்பட்ட பாகிஸ்தான், வங்காளதேஸ், மொரோக்கோ போன்றவைகள் இஸ்லாமிய நாடுகள் என்பதனால் இவ்வாறான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இஸ்லாத்துக்கோ, அதன் நடைமுறைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை.
ஆனால் எமது நாட்டு சூழ்நிலை அப்படியல்ல. இங்கே இஸ்லாத்தை குழிதோண்டி புதைத்து இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு எவ்வாறு வெளியேற்றலாம் என்று பேரினவாதிகள் திட்டமிட்டு வருகின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் நாங்கள் இவ்வாறான சட்டங்களில் திருத்தம் செய்கின்ற நிலைமைக்கு வந்தால் அது எங்களது பலயீனமாக கருதப்படும். எதிர்காலங்களில் ஒவ்வொன்றாக திருத்தம் செய்யும்படி அழுத்தம் வழங்க முற்படுவார்கள். அதனால் எமது தனியார் சட்டம் முழுமையாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அத்துடன் இறுதியில் அல்-குராணிலும் திருத்தம் செய்யும்படி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா என்பதுதான் எங்களது கேள்வியாகும். இதனால் எமது எம்பிக்கள் இஸ்லாத்தினை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எமது மக்களின் விருப்பமாகும்.