Breaking
Sun. Nov 24th, 2024

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாக சமூகங்களுக்கிடையே வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஒருசில குழுக்கள் இயங்குகின்றன. எந்த சமூகமாக இருந்தாலும், இந்த நடவடிக்கை தவறானதாகும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடு எனும் வகையில், அனைத்து மதங்களையும் மதிப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், சமாதானமாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், சமய ரீதியாக வெறுப்பை தூண்டிவிடல் முதல் தணித்து விடல், பகைமையைத் தூண்டல் அல்லது வன்முறையை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அல்லது தேசிய மட்டத்தில் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை தூண்டல் அல்லது யுத்தத்தை தூண்டல் போன்ற நடவடிக்கைகளில் எந்தவொரு நபரும் ஈடுபட முடியாது என்றார்.

சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியாது என உள்நாட்டு காவல் துறையில் தவறான நிலைப்பாடு நிலவுகின்றது. இது தவறானதாகும்.

ஏனெனில், வாய் மூலமாக ஒரு சமூகத்துக்கு அல்லது தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தை ஒரு நபர் வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படுவதை போன்று, சமூகவலைத்தளங்களிலும் அவ்வாறான பதிவு இடப்படுவது தண்டனைக்குரியதாகும்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு ICCPRஇன் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும்.

வித்தியாசம் யாதெனில், ஆதாரமாகும். ஆரம்ப கட்டமாக இந்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை அதிகார அமைப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *