நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அவருக்கு எதிரான மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளின் ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கைத்தொழில் மற்றும் வணிப அமைச்சராக கடமையாற்றிய ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தனர்.
இதனையடுத்து பதியூதீன் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சரவை அந்தஸ்துள்ள, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக கடமையாற்றிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பதவி விலகியவர்களில், கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் மீண்டும் பதவியேற்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.