பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் மீதான சதொச விசாரணை! இனவாதத்தை ஊதிப்பெருத்தும் நோக்கம்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

சதொச நிறுவனத்துக்கு 2014 இல் அரிசி கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் FCID யினர்களினால் நேற்று (25.05.2019) ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

 

2௦15 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானதில் இருந்து ஏராளமான விசாரணைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் அமைச்சர் றிசாத் விசாரிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவர் மோசடி செய்த குற்றத்துக்காகவே விசாரிக்கப்படுகிறார் என்று கருதியிருக்கலாம்.

ஆனால் இவ்வளவு காலமும் விசாரணை செய்ய தவறியவர்கள் இன்று இனவாதம் ஊதிப்பெருத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு நெருக்கடி தருகின்ற இந்த நேரத்தில் விசாரணை செய்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அமைச்சர் றிசாத் சம்பந்தமாக கடந்த காலங்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதி உள்ளேன். அவரது அனைத்து விடயங்களையும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் விபரித்துள்ளேன். திரும்ப திரும்ப அதனை கூறுகின்ற நேரம் இதுவல்ல.

முற்போக்கு அரசியல் சிந்தனைகொண்ட இயக்கங்களையும், தலைவர்களையும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் கொண்ட அரசாங்கமும், இனவாத சக்திகளும் விரும்புவதில்லை. அவர்களை அழிப்பதற்கே முற்படுவார்கள்.

அந்தவகையில் பாலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதில்லை. அவ்வியக்கத்தை அழிப்பதற்காக அதன் தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்து வருகின்றது.

அதேநேரம் மிதவாத போக்கைகொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்பாஸ் அவர்களோடு இஸ்ரேல் நல்லுறவை கொண்டாடுகின்றது.

அதுபோலவே மத்தியகிழக்கில் மிதவாத போக்குடைய தலைவர்களை கொண்ட நாடுகளுடன் நட்புறவுகொண்டு வருகின்ற அமெரிக்கா, முற்போக்கு தலைவர்கள் உள்ள நாடுகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.

இங்கே எது சரி, எது பிழை என்று விவாதிப்பதற்குரிய நேரம் இதுவல்ல. இத்தனை இனவாதம் கொண்ட நாட்டில் யாருக்கும் பயப்படாமல் துணிந்து நின்று முஸ்லிம் சமூகத்துக்காக சத்தமிட்டு குரல் கொடுத்ததனை நாங்கள் உதாசீனம் செய்ய முடியாது.

கடந்த காலங்களில் செயல்பட்டதுபோல அல்லாமல், மேலாதிக்க வெறிகொண்ட இனவாத சக்திகளுக்கு அமைச்சர் றிசாத் அவர்கள் இப்போது அடங்க மறுத்துள்ளார் என்பது இந்த FCID விசாரணையின் மூலம் எங்களால் ஊகிக்க முடிகின்றது.

அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் என்று தெரிந்திருந்தும், தனது ஆதரவாளர் என்ற காரணத்துக்காக அவரை விடுதலை செய்வதற்காக இராணுவ தளபதி மூலமாக மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. எந்தவொரு அமைச்சரும் இவ்வாறான விசப்பரீட்சையில் இறங்கமாட்டார்கள்.

நான் றிசாத் பதியுதீனின் கட்சி ஆதரவாளன் அல்ல, அவரை தலைவராக ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அத்துடன் என்னைப்போன்று அதிகமாக அவரை விமர்சித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

எவராக இருந்தாலும் எமது சமூகத்துக்காக குரல்கொடுக்கும் போது அந்த குரலை நசுக்க முற்பட்டால், அது முழு சமூகத்தையும் நசுக்குவதற்கு சமமாகும். அதனாலேயே தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் அமைச்சர் றிசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார்.

எனவே அமைச்சர் றிசாத் மீதான FCID விசாரணையானது ஊழலை கண்டுபிடிப்பதற்கான விசாரணை அல்ல. அது முஸ்லிம் சமூகத்தில் உள்ள முற்போக்கு சக்திகளை அடக்கி அச்சுறுத்தும் ஓர் இனவாத செயல்பாடாக பார்க்கப்படுகிறது. அத்துடன் அது தென்னிலங்கை இனவாதிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.

Related posts

ஜூலை மாதம் முதல் குறையும் பஸ் கட்டணங்கள்!

Editor

ஜேர்மன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

wpengine

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் யானை

wpengine