மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லை பிரச்சினைக்கான வழக்கு விசாரனைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா ஒத்தி வைத்துள்ளார்.
மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள காணிப்பகுதியை மன்னார் நகர சபை சூற்றுலா பூங்காவாக அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில்,மன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் இடையில் எல்லை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பில் மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கோரியே பொலிஸார் குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கில் மன்னார் நகரசபை சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.ஜெபநேசன் லோகு மற்றும் சட்டத்தரணிகளான புராதனி,சுதர்ஸனா ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
மன்னார் பிரதேச சபை சார்பாக சட்டத்தரணி செல்வராசா டிணேஸன் ஆஜராகி இருந்தார். மன்னார் நகர சபை சார்பாக சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் எல்லை தொடர்பில் அப்பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதா அல்லது ஏற்படவில்லையா என்பதை அடுத்த தவணையின் போது இரு பகுதியினரும் நிரூபிக்க வேண்டும் என நீதிவான் கட்டளை பிறப்பித்து இவ்வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.