Breaking
Sun. Nov 24th, 2024

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதிகளால் தொடரப்படும் இந்த நாசகார வன்முறைகளை தடுப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன என்று முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனவாத தாக்குதல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கடந்த 21ம் திகதி, முஸ்லிம் என்ற பெயர் தாங்கிய குழுவொன்று வெளிநாட்டு கூலிப்படையொன்றான ஐஎஸ் என்ற கொலைவெறி அமைப்போடு இணைந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து தெற்கின் இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராக தனது வழமையான இனவாத பிரசாரங்களை மிக வேகமாகவும், உற்சாகத்தடனும் முன்னெடுத்திருக்கின்றன.

இதன் விளைவாகவே கடந்த 13ம் திகதி முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட இனவாத தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள்; மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இத்தகைய இனவாதத் தாக்குதல்கள் இந்நாட்டை ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரண்டு அரசாங்கங்களின் காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்த நல்லாட்சிலும் இத்தகைய இனவாத தாக்குதல்கள் தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும்.

அன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அளுத்கம, தர்காநகர் போன்ற ஊர்களில் கலவரங்கள் இடம்பெற்றன.

முஸ்லிம்களின் உயிர், உடமை, சொத்துக்களுக்கு பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இனவாதிகளால் எரித்து நாசமாக்கப்பட்டன.

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அற்ற ஒரு சூழ்நிலையில்தான் இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் அமோக ஆதரவைப்பெற்று கடந்த 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. இந்த நல்லாட்சியின் ஆட்சிக் காலத்தில் கூட தொடர்ந்தும் முஸ்லிம்கள் இனவாதத் தாக்குதல்களுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நிகழ்ந்தது போன்றே இந்த நல்லாட்சியின் காலத்திலும்; கிந்தோட்டை, திகன, தெல்தோட்டை போன்ற நகரங்களில் கலவரங்கள் இடம்பெற்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையில் சில இடங்களில் இனவாதிகளால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர், பல கோடிகள் பெறுமதியான முஸ்லிம்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டன.

நீர்கொழும்பு பலகத்துறை , கொட்டாரமுல்ல, மினுவான்கொட, குளியாப்பிட்டி, நிகவெரட்டிய, போன்ற பகுதிகளில் இனவாதிகளின் திட்டமிடப்பட்ட வன்முறை அரங்கேறியுள்ளது.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களோடு இந்த சம்பவத்தை இனவாதிகள் இன்று முடிச்சு போட முனைகின்றனர். ஆனால் இந்த தாக்குதலை காரணம் காட்டும் இனவாதிகள், இதற்கு முன்னரும் பல தடவைகள்; முஸ்லிம்களை தாக்கி அவர்களின் உடமைகளை அழித்துள்ளனர்.

மீண்டுமொரு முறை முஸ்லிம்களை அழிப்பதற்கு தருணம் பார்த்திருந்த குறித்த இனவாத சக்திகளுக்கு இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

இன்று முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முஸ்லிம்கள் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் நஷ்டஈடு வழங்குவதால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இனவாதிகளின் செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் அச்சம் மற்றும் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் அவஸ்த்தைகளுக்கு தீர்வு காணமுடியாது.

இந்நாட்டு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தொடர் கதையாக நீடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும்; இதற்கான உறுதியான ஒரு தீர்வை நோக்கி செயற்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அரசியல், கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயலாற்றுவது இன்றைய காலத்தின் தேவையாகும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து இழப்புகளையும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பார்வையிட்டு அனுதாபம் தெரிவிப்பதாலோ, அவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதாலோ பிரச்சினைகள் முற்றுப் பெறப்போவதில்லை.

எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கான நிலையை ஏற்படுத்துவதற்குரிய காத்திரமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரணி சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *