தமிழ், முஸ்லிம் உறவுகளின் விரிசல் அபாயகரமானது, எனவே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய பாதையை உருவாக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள், தென்னிலங்கை குண்டுத் தாக்குதலின் பின்னர், வடமாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.
இராணுவம் குவிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம், இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தமிழர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள்.
அந்த செயற்பாடுகளை மாற்றி, வெளிப்படையாகவே, இராணுவம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது, தமிழர்கள் இன்னுமொரு யுத்த சூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை மிகப் பாரியளவில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என்பது ஒரு புறமாக இருந்தாலும், குறிப்பாக, தமிழர்கள் மீது தான், இராணுவத்தினரும், அரச படைகளின் பார்வைகளும் காணப்படுகின்றன. தமிழர்களை பயந்த சூழலில் வைத்துக்கொள்வதற்கான எண்ணப்பாட்டை தெளிவாக காட்டுகின்றது.
வன்முறைகளை அடக்குவதற்காக இராணுவத்தினர் மகிழ்ச்சிகரமாக செயற்படுவதை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது ஒரு அபாயகரமான சூழல்.
குறிப்பாக, உயிரிழந்தவர்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், தென்னிலங்கையிலும் சரி, கிழக்கு மாகாணத்திலும் சரி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என்பது வெளிப்படையானது. அடிப்படை தீவிரவாத எண்ணங்களைக் கொண்டவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.
ஆனால், அவர்கள் அவ்வாறான தாக்குதலை மேற்கொண்ட போதிலும், இறந்தவர்கள் தமிழர்களாக இருக்கின்றார்கள்.
இதுவும் இலங்கையில் இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பாக எம்மால் பார்க்க முடிகின்றது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற உலக நாடுகள் பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்ற இந்த வேளையில், இலங்கைக்கு ஆதரவாக கருத்தைச் சொல்லும் கால சூழ்நிலைக்குள் இலங்கை தள்ளப்பட்டிருக்கின்றது.
70 வருடமாக உரிமைக்காக போராடிய தமிழினம், செத்து மடிந்து, யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்து 10 வருடங்கள் ஜனநாயக வழியில் தமது உரிமைக்காக போராடி வரும் போதும், இன்று வரை எந்தவிதமான அரசியல் தீர்விற்கான முன்நகர்வுகளும் எடுத்து வைக்கப்படவில்லை. அந்த நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இவற்றை எந்தக் கட்டத்தில் இருந்து தமிழர்கள் ஆரம்பிப்பது. அப்படியானால், தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் மேற்கொண்டதாக, பெரிய பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழலில், தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தான் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள்.
இவ்வாறான கதைகளினால், தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கிடையில் பாரிய விரிசல்கள் உருவாகக்கூடும். தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான பாதிப்பு என்பது ஒரு அபாயகரமானது.
வடக்கும், கிழக்கும் இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்ற தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசை கூட இன்று ஆட்டம் கண்டுள்ளது.