நேற்றைய தினம் நாட்டிலுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த பாடசாலைக்குச் சென்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களை மறுநாளில் இருந்து அபாயாவுடன் வரவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். இன்றைய தினம் (07) நோன்பு நோற்ற நிலையில் கலர் அபாயா அணிந்து சென்ற ஆசிரியர்களை பாடசாலை நிர்வாகமும் பெற்றோரும் சூழ்ந்து மோசமான வார்த்தைகளால் ஏசியுள்ளனர்.
அதிலுள்ள முஸ்லிம் ஆசிரியை ஒருவர் 15 வருடங்களாக அதே பாடசாலையில் கற்பித்து வருபவர். ஆனால் அவரையும் அவமதித்துள்ளனர்.
விடயம் மேல் மாகாண ஆளுனர் வரை சென்றதுடன், அவர் வலயக் கல்விப் பணிப்பாளரை அனுப்பியுள்ளார்.
ஆனால் வலயக் கல்விப் பணிப்பாளரான பெரும்பான்மை இன சமூகப் பெண், முஸ்லிம் ஆசிரியைகளை பாடசாலை வருவதாக இருந்தால் சாரி அணிந்து வருமாறு இனவாதம் கலந்த தொனியில் பேசியுள்ளார்.
இது குறித்து அப்பாடசாலை ஆசிரியை ஒருவரின் தந்தை என்னைத் தொடர்பு கொண்டதுடன், குறித்த விடயத்தைக் கூறி ஆசிரியைகள் ஆளுனரிடம் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.
நான் உடனே ஆளுனர் அஸாத் சாலியைத் தொடர்பு கொண்ட போது இந்தப் பிரச்சினை சம்பந்தமான புகார் குறித்து தான் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
SLMC தலைமையகம் தாருஸ்ஸலாமிலுள்ள TASK FORCE இனைத் தொடர்பு கொண்ட போது, சம்பவத்தின் பின்னர் திங்கட்கிழமை தான் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே வைத்தியசாலைகளில் ஹிஜாப் பிரச்சினை ஏற்பட்ட போது, சுகாதார இராஜாங்க அமைச்சு கட்சியிடம் இருந்ததால் இலகுவாக சுற்றறிக்கையை வெளியிட முடிந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த விடயத்தில் மேல் மாகாண ஆளுனர் உட்பட உயர் மட்டத்தினர் கவனம் செலுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறினர்.